பிரதமர் மோடி நாளை மறுநாள் (18-ந் தேதி) கோவையில் வாகன பேரணியாக சென்று பிரசாரம் மேற்கொள்ள உள்ளார். இதற்காக அவர் 18-ந்தேதி மாலை 4.30 மணிக்கு கர்நாடக மாநிலம் சிவமொக்கா விமான நிலையத்தில் இருந்து புறப்பட்டு, கோவை சர்வதேச விமான நிலையத்துக்கு மாலை 5.30 மணிக்கு வருகிறார்.
அங்கிருந்து மாலை 5.45 மணிக்கு கார் மூலம் வாகன பிரசாரத்தை மேற்கொள்ளும் பிரதமர் மோடி மாலை 6.45 மணிக்கு பிரசாரத்தை நிறைவு செய்கிறார். அதைத்தொடர்ந்து கோவை அரசு விருந்தினர் மாளிகைக்கு இரவு 7 மணிக்கு வரும் பிரதமர் இரவில் அங்கு தங்குகிறார். 19-ந் தேதி செவ்வாய்க்கிழமை காலை 9.30 மணிக்கு கோவை அரசு விருந்தினர் மாளிகையில் இருந்து புறப்பட்டு 9.40 மணிக்கு கோவை சர்வதேச விமானம் நிலையம் வந்தடைகிறார்.
அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் கேரள மாநிலம் பாலக்காடு செல்லும் பிரதமர் காலை 11.40 மணிக்கு அங்கு நடைபெறும் பொதுக்கூட்டத்தில் பங்கேற்கிறார். அதன்பின்னர் பாலக்காட்டில் இருந்து பிற்பகல் 1 மணிக்கு ஹெலிகாப்டர் மூலம் புறப்பட்டு பிற்பகல் 1.50 மணிக்கு சேலம் செல்லும் பிரதமர் மோடி அங்கு நடைபெறும் பொதுக்கூட்டத்தில் பங்கேற்கிறார். அதன்பின்னர் சேலம் விமான நிலையம் செல்லும் பிரதமர் பிற்பகல் 2.25 மணிக்கு விமானம் மூலம் டெல்லிக்கு புறப்பட்டு செல்கிறார்.