தமிழ்நாட்டில் பாராளுமன்ற தேர்தல் வருகிற 19-ந்தேதி நடக்கிறது. இதையொட்டி தேர்தல் களத்தில் அனல்பறக்கும் பிரசாரம் நடக்கிறது. இந்த தேர்தலில் தமிழ்நாட்டிலும் வெற்றி கணக்கை தொடங்க வேண்டும் என்பதில் பா.ஜனதா தீவிரமாக உள்ளது. இதற்காக திட்டமிட்டு தேர்தல் பணிகளை தீவிரப்படுத்தி வருகிறார்கள்.
தேர்தல் தேதி அறிவிக்கப்படுவதற்கு முன்பே பிரதமர் மோடி 5 முறை தமிழகத்தில் சுற்றுப்பயணம் செய்து திருப்பூர், நெல்லை, கன்னியாகுமரி, சென்னை, கோவை, சேலம் ஆகிய நகரங்களில் பிரசார பொதுக் கூட்டங்களில் பேசினார். தற்போது மீண்டும் தமிழ்நாட்டில் 4 நாட்கள் சூறாவளி சுற்றுப்பயணம் செய்து ஆதரவு திரட்டுகிறார்.
வருகிற 9-ந் தேதி தமிழகம் வரும் பிரதமர் மோடி அன்று மாலை 4 மணிக்கு வேலூரில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள பிரமாண்ட ரோடுஷோவில் கலந்து கொள்கிறார். அங்கு பா.ஜனதா கூட்டணி சார்பில் போட்டியிடும் புதிய நீதிக்கட்சி தலைவர் ஏ.சி.சண்முகம், பா.ம.க. வேட்பாளர்கள் சவுமியா அன்புமணி (தர்மபுரி), தேவதாஸ் (கள்ளக்குறிச்சி) கணேஷ் குமார் (ஆரணி), தங்கர் பச்சான் (கடலூர்), பா.ஜனதா வேட்பாளர்கள் நரசிம்மன் (கிருஷ்ணகிரி), அஸ்வத்தாமன் (திருவண்ணாமலை), கார்த்தியாயினி (சிதம்பரம்) ஆகியோருக்கு ஆதரவு திரட்டுகிறார்.
அங்கிருந்து ஹெலிகாப்டரில் சென்னை விமான நிலையம் வருகிறார். பின்னர் காரில் நந்தனம் வழியாக பனகல் பூங்கா வருகிறார். அங்கிருந்து பாண்டிபஜார் வழியாக தேனாம்பேட்டை சிக்னல் வரை 2 கிலோ மீட்டர் தூரம் ரோடு ஷோ நடத்துகிறார்.
இங்கு பா.ஜனதா வேட்பாளர்கள் டாக்டர் தமிழிசை (தென்சென்னை), வினோஜ் செல்வம் (மத்திய சென்னை), பால் கனகராஜ் (வடசென்னை), பொன்பால கணபதி (திருவள்ளூர்), பா.ம.க. வேட்பாளர்கள் ஜோதி வெங்கடேசன் (காஞ்சிபுரம்) கே.பாலு (அரக்கோணம்), த.மா.கா. வேட்பாளர் வி.என்.வேணுகோபால் (ஸ்ரீபெரும்புதூர்) ஆகியோருக்கு ஆதரவு திரட்டுகிறார். சென்னையில் பிரதமர் வருகையையொட்டி பலத்த பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்யப்படுகிறது.
பிரதமரின் ‘ரோடுஷோ’ நிகழ்ச்சி தொடங்கும் தி.நகர் பனகல் பூங்காவில் இருந்து தேனாம்பேட்டை சிக்னல் வரையில் சாலையில் இரு புறமும் போலீசார் தீவிர காண்காணிப்பு பணியில் ஈடுபட உள்ளனர். ரோடு ஷோ நடத்தப்படும் சாலை எப்போதும் பரபரப்பாக காணப்படும் சாலையாகும். வருகிற 9-ந் தேதி அன்று மாலை 6 மணிக்கு பிரதமரின் ரோடு ஷோ நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ள நிலையில் அன்று காலையில் இருந்தே அந்த பகுதி முழுவதையும் போலீசாரும் மத்திய பாதுகாப்பு அதிகாரிகளும் தங்களது முழு கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர உள்ளனர்.
டெல்லியில் இருந்து பிரதமரின் பாதுகாப்பு அதிகாரிகளும் சென்னைக்கு வருகை தந்து பாதுகாப்பு ஏற்பாடுகள் பற்றி ஆய்வு செய்ய உள்ளனர். பிரதமரின் வருகையையொட்டி சென்னை மாநகர் முழுவதுமே டிரோன்கள் பறப்பதற்கு தடை விதிக்கப்படுகிறது. 5 அடுக்கு பாதுகாப்பு போடப்படுகிறது. 15 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுகிறார்கள்.
சென்னை மாநகர் முழுவதும் சந்தேக நபர்கள் யாராவது தங்கி இருக்கிறார்களா? என்பது பற்றி போலீசார் ஆய்வு செய்து வருகிறார்கள். இதற்காக லாட்ஜூகள், தங்கும் விடுதிகள் உள்ளிட்ட இடங்களில் அதிரடி சோதனை நடத்தப்பட்டு வருகிறது. பிரதமர் வருகையையொட்டி மேற்கொள்ளப்பட வேண்டிய பாதுகாப்பு ஏற்பாடுகள் தொடர்பாக போலீஸ் உயர் அதிகாரிகள் இன்று ஆலோசனை நடத்தினர்.
போலீஸ் கமிஷனர் சந்தீப் ராய் ரத்தோர் மேற்பார்வையில் கூடுதல் கமிஷனர் பிரேமானந்த் சின்கா, இணை கமிஷனர் சி.பி.சக்கரவர்த்தி ஆகியோர் பாதுகாப்பு ஏற்பாடுகள் பற்றி இன்று ஆலோசித்தார்கள். தி.நகர் மற்றும் பாண்டி பஜார் பகுதிகளில் உள்ள அனைத்து லாட்ஜூகளும் இப்போதே போலீசாரின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. அப்பகுதியில் உள்ள வணிக நிறுவனங்களில் பணி புரிபவர்கள் யார்-யார்? என்பது பற்றிய தகவல்களை திரட்டியுள்ள போலீசார் அதில் குற்றப் பின்னணி கொண்டவர்கள் யாராவது இருக்கிறார்களா? என்பது பற்றியும் விசாரணை நடத்தி வருகிறார்கள். ‘ரோடு ஷோ’ நடைபெறும் அன்று தி.நகர் மற்றும் பாண்டிபஜார் பகுதியில் போக்குவரத்து மாற்றத்துக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அப்பகுதி முழுவதும் போலீசார் தீவிரமாக கண்காணித்து பாதுகாப்பு பணிகளை மேற்கொள்ள உத்தரவிடப்பட்டுள்ளது.
மறுநாள் (10-ந் தேதி) காலை 11 மணிக்கு நீலகிரியில் பிரமாண்ட ரோடு ஷோவில் பங்கேற்கிறார். இதில் நீலகிரி பா.ஜனதா வேட்பாளர் மத்திய மந்திரி எல்.முருகனுக்கு ஆதரவு திரட்டுகிறார். மாலையில் கோவையில் நடைபெறும் பிரமாண்ட பொதுக்கூட்டத்தில் தமிழக பா.ஜனதா தலைவர் அண்ணாமலைக்கு ஆதரவு திரட்டி பேசுகிறார்.
பிரசாரத்தை முடித்து விட்டு டெல்லி திரும்பும் பிரதமர் மோடி மீண்டும் 13 மற்றும் 14-ந் தேதிகளில் தமிழகத்துக்கு பிரசாரத்துக்கு வருகிறார். 13-ந் தேதி பெரம்பலூர் பொதுக்கூட்டத்திலும், 14-ந் தேதி விருதுநகர் பொதுக்கூட்டத்திலும் பேசுகிறார். தேர்தல் பிரசாரம் வருகிற 17-ந் தேதி முடிவடைகிறது. இந்த சூழலில் அடுத்தடுத்து இரண்டு முறை பிரதமர் மோடி தமிழகம் வருவது பா.ஜனதா மற்றும் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளிடையே உற்சாகத்தை ஏற்படுத்தி உள்ளது.