X

பிரதமர் மோடி சென்னை வருகை – விமான நிலையத்தில் 7 அடுக்கு பாதுகாப்பு

பிரதமர் மோடி 2 நாள் பயணமாக சென்னை வருவதால் சென்னை விமான நிலையத்தில் 7 அடுக்கு பாதுகாப்பு அமல்படுத்தப்பட்டு உள்ளது. சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் நடைபெறும் 44-வது உலக செஸ் ஒலிம்பியாட் போட்டியை தொடங்கி வைக்க பிரதமர் மோடி 2 நாள் பயணமாக நாளை மறுநாள்(வியாழக்கிழமை) குஜராத்தில் இருந்து தனி விமானத்தில் சென்னை வருகிறார். பிரதமர் மோடி வருகையையொட்டி சென்னை விமான நிலையத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகள் அதிகரிக்கப்பட்டு உள்ளது. பிரதமரின் சிறப்பு பாதுகாப்பு படையான எஸ்.பி.ஜி. குழுவைச் சேர்ந்த 60 பேர் டெல்லியில் இருந்து சென்னை வந்து உள்ளனா்.

இந்த சிறப்பு படையினர் பல்வேறு குழுக்களாக பிரிந்து விமான நிலையம், நேரு உள்விளையாட்டு அரங்கம், கிண்டி அண்ணா பல்கலைக்கழகம், பிரதமரின் ஹெலிகாப்டா் தரை இறங்கும் அடையாறு ஐ.என்.எஸ். தளம் ஆகிய இடங்களில் செய்ய வேண்டிய பாதுகாப்புகள் குறித்து ஆய்வு செய்து வருகின்றனா். மேலும் பிரதமரின் பாதுகாப்பு ஏற்பாடுகள் பற்றி எஸ்.பி.ஜி. உயா் பாதுகாப்பு படை அதிகாரிகள் ஆலோசித்தனர். இதில் மத்திய தொழில் பாதுகாப்பு படை, விமான பாதுகாப்பு படை, விமான நிலைய உயா் அதிகாரிகள், சென்னை மாநகர உயா் போலீஸ் அதிகாரிகள், தமிழக அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனா்.

இந்த கூட்டத்தில் பிரதமரின் பாதுகாப்பு ஏற்பாடுகள் பற்றி விரிவாக விவாதிக்கப்பட்டது. பிரதமர் சென்னை விமான நிலைய முக்கிய பிரமுகர்கள் ஓய்வறையில் சுமார் முக்கால் மணி நேரம் தங்குகின்றார். பிரதமரை வரவேற்க எத்தனை பேருக்கு பாஸ்கள் வழங்குவது?. அவரை சந்திப்பதற்கு யாருக்கெல்லாம் அனுமதி கொடுப்பது? போன்றவைகளும் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது. சென்னையில் இருந்து பிரதமர் புறப்பட்டு செல்லும் வரை சென்னை விமான நிலையத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் கடுமையாக அதிகரிக்கப்படுகிறது. அதன்படி சென்னை விமான நிலையம் முழுவதும் 7 அடுக்கு பாதுகாப்பு முறை கொண்டு வரப்பட்டுள்ளது. சென்னை மீனம்பாக்கம் பழைய விமான நிலையம் முழுவதும் சிறப்பு பாதுகாப்பு படை அதிகாரிகளின் கட்டுப்பாட்டில் உள்ளது. எனவே பழைய விமான நிலையத்துக்கு முறையான அனுமதி இன்றி யாரும் செல்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

பழைய விமான நிலைய வளாகத்தில் காா்கோ, கொரியா், வெளிநாட்டு அஞ்சலகம் உள்ளிட்ட அலுவலகங்கள் உள்ளன. அந்த நிறுவனங்களுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. அந்த நிறுவனங்களில் தற்காலிக பணியாளா்களுக்கு அனுமதி இல்லை. நிரந்தர ஊழியா்கள் முறையான அனுமதி பெற்று உரிய அடையாள அட்டையை அணிந்து கொண்டு வரவேண்டும் என அறிவுறுத்தப்பட்டு உள்ளனர். மேலும் பழைய விமான நிலைய பகுதிகளில் ஓடுபாதை பராமரிப்பு பணியில் தற்காலிக ஒப்பந்த பணியாளா்களுக்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது. விமான நிலைய நிரந்தர பணியாளா்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவாா்கள் என கூறப்பட்டு உள்ளது. இந்த கட்டுப்பாடுகள் அனைத்தும் வருகிற 29-ந் தேதி மாலை வரை அமலில் இருக்கும் என சென்னை விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர்.