ராஜஸ்தான் மாநிலம் பலோத்ராவில் காங்கிரஸ் சார்பில் சமீபத்தில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் பங்கேற்ற ராகுல் காந்தி பிரசாரத்தில் ஈடுபட்டார். அப்போது அவர்,” உலகக்கோப்பை இறுதிப் போட்டியை பார்க்க ஒரு அபசகுனம் பிடித்த நபர் வந்தார். அவர் வருவதற்கு முன்பு வரை இந்தியா வெற்றி பெறும் நிலையில் தான் இருந்தது.
அவர் எப்போதாவது தொலைக்காட்சியில் தோன்றி இந்து முஸ்லிம் என பேசிக் கொண்டிருப்பார். திடீரென கிரிக்கெட் பார்க்க நேரில் செல்வார். ஆனால், நிச்சயம் இந்திய அணி தோற்றுவிடும். அவர் அப்படிப்பட்ட அபசகுனம் பிடித்தவர்” என்று குறிப்பிட்டிருந்தார்.
ராகுல் காந்தியின் பேச்சு சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. மேலும், ராகுல் காந்தியின் இந்த கருத்துக்காக தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாஜக வலியுறுத்தியுள்ளது.
இந்நிலையில், இது தொடர்பாக விளக்கம் அளிக்க ராகுல் காந்திக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. தனது பேச்சுக்கு ராகுல் காந்தி வரும் 25 ஆம் தேதிக்குள் விளக்கம் தர வேண்டும் என இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.