இந்தியாவில் நடைபெறும் பாராளுமன்றத் தேர்தலில், பாஜக மீண்டும் வெற்றி பெற்று ஆட்சியமைத்தால், காஷ்மீர் பிரச்சனைக்கு தீர்வு காண்பதற்கான, அமைதி பேச்சுவார்த்தை நடத்த வாய்ப்பு உள்ளது என பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் கருத்து தெரிவித்திருந்தார். பிரதமர் மோடிக்கு ஆதரவாக இம்ரான் கான் பேசியிருப்பதாக காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்து வந்தன.
இது குறித்து செய்தியாளர்களுக்கு இன்று அளித்த பேட்டியில் மத்திய பாதுகாப்புத்துறை மந்திரி நிர்மலா சீதாராமன் கூறியதாவது:
இதுப்போன்ற கருத்துகள் ஏன் பரவுகின்றன என தெரியவில்லை. பிரதமர் மோடியை எப்படியாவது வெளியேற்ற வேண்டும் என்கிற எண்ணத்துடன் செயல்படும் காங்கிரசின் முக்கிய தலைவர்கள், பாகிஸ்தான் சென்று இம்ரான் கானை சந்தித்து திட்டம் தீட்டி வருகின்றனர்.
அதேபோல் இம்ரான் கானின் இந்த கருத்துக்கும் காங்கிரசின் சூழ்ச்சியே காரணமாகும். இப்படி செய்வதால் என்ன தான் நடந்துவிடப்போகிறது என புரியவில்லை.
இவ்வாறு அவர் பேசினார்.
இதையடுத்து பாகிஸ்தான் வெளியுறவு துறை மந்திரி ஷா முகமது குரேஷி, இந்தியா, பாகிஸ்தானை ஏப்ரல் 16 மற்றும் ஏப்ரல் 20 ஆகிய தேதிகளில் தாக்குதல் செய்யவுள்ளது என கூறியிருந்தார். இது குறித்து நிர்மலா கூறுகையில், ‘இந்த தேதிகள் குறித்த விவரத்தை இந்தியாவில் இருந்து யார் அனுப்புகின்றனர் என தெரியவில்லை. இந்த கருத்து வேடிக்கையாகவும், வியப்பாகவும் இருந்தது’ என கூறியுள்ளார்.