X

பிரதமர் மோடி உரைக்கு கண்டனம் தெரிவித்த சித்தராமையா

பிரதமர் மோடி நேற்று தொலைக்காட்சியில் தோன்றி நாட்டு மக்களை உத்தேசித்து உரையாற்றினார். பிரதமரின் இந்த உரைக்கு கர்நாடக சட்டசபை எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

கொரோனா வைரஸ் காரணமாக நெருக்கடியில் சிக்கியுள்ள மக்களுக்கு மத்திய அரசு இதுவரை என்ன செய்துள்ளது, இனி என்ன செய்யப்போகிறது என்பது குறித்து பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு விளக்கி இருக்க வேண்டும். நாட்டு மக்களுக்கு அறிவுரை கூறுவதன் மூலம் தனது தோல்விகளை மோடி மூடிமறைத்துவிட்டார். கொரோனா பாதிப்பு அதிகரிக்க மக்களின் அலட்சியம் காரணம் அல்ல, மத்திய-மாநில அரசுகளின் தோல்வியே காரணம். இதற்காக நாட்டு மக்களிடம் பிரதமர் மோடி மன்னிப்பு கேட்டிருக்க வேண்டும்.

கொரோனா வைரசை ஒழிக்க அறிவியல் பூர்வமான காரணங்களை கூறுவதை விட்டு, ஜோதிடர்களை போல் பேசினால் மக்கள் முட்டாள்கள் ஆகாமல் வேறு என்ன ஆவார்கள். கொரோனா நெருக்கடி காலத்தில் மத்திய அரசு அறிவித்த ரூ.20 லட்சம் கோடி தொகுப்பு நிதி உதவி யார்-யாருக்கு வழங்கப்பட்டுள்ளது, பிரதமரின் கேர்ஸ் நிதிக்கு வந்த நிதி எவ்வளவு, என்னென்ன பணிகளுக்கு அது செலவு செய்யப்பட்டுள்ளது என்பதை மக்களுக்கு தெரிவித்து இருக்க வேண்டும்.

இவ்வாறு சித்தராமையா தெரிவித்துள்ளார்.