பாராளுமன்ற பொதுத்தேர்தல் ஓரிரு நாட்களில் அறிவிக்கப்பட இருக்கிறது. பிரதமர் மோடி நாடு முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். குறிப்பாக தமிழகத்தை குறி வைத்து திருப்பூர் மாவட்டம் பல்லடம், நெல்லை, சென்னை போன்ற பகுதிகளில் நடந்த பொதுக்கூட்டங்களில் பா.ஜனதா கூட்டணிக்கு ஆதரவு திரட்டிச் சென்றார்.
இதனை தொடர்ந்து கன்னியாகுமரி அருகே உள்ள அகஸ்தீஸ்வரம் விவேகானந்தா கல்லூரி மைதானத்தில் பா.ஜனதா கட்சியின் பிரமாண்ட பொதுக்கூட்டம் இன்று (வெள்ளிக்கிழமை) நடைபெற உள்ளது. இந்த பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி உரையாற்றுகிறார்.
இதற்காக இன்று (வெள்ளிக்கிழமை) காலை அவர் விமானம் மூலம் திருவனந்தபுரம் வருகிறார். அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் காலை 11 மணிக்கு கன்னியாகுமரி அரசு விருந்தினர் மாளிகை வளாகத்தில் அமைந்துள்ள ஹெலிபேடு தளத்தில் வந்திறங்குகிறார். அங்கிருந்து பிரதமர் மோடி கார் மூலம் புறப்பட்டு பொதுக்கூட்ட மேடைக்கு சென்று பா.ஜனதா கூட்டணிக்கு ஆதரவு திரட்டி பேசுகிறார்.
இந்த கூட்டத்தில் மத்திய மந்திரி எல்.முருகன், பா.ஜனதா மாநில தலைவர் அண்ணாமலை, நடிகர் சரத்குமார், ராதிகா சரத்குமார், முன்னாள் மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன், கூட்டணி கட்சி தலைவர்கள் பலர் கலந்து கொள்கிறார்கள். பொதுக்கூட்டம் முடிந்ததும் மதியம் 12.15 மணிக்கு பிரதமர் மோடி மீண்டும் கார் மூலம் கன்னியாகுமரி அரசு விருந்தினர் மாளிகைக்கு செல்கிறார். அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் கேரள மாநிலம் பத்தனம்திட்டாவுக்கு புறப்படுகிறார்.
பிரதமர் மோடி பங்கேற்கும் பொதுக்கூட்டத்துக்காக விவேகானந்தா கல்லூரி மைதானத்தில் பிரமாண்டமான மேடை அமைக்கப்பட்டுள்ளது. நூற்றுக்கணக்கான தொழிலாளர்கள் கடந்த 2 நாட்களாக இரவு, பகலாக மேடை அமைக்கும் பணியில் ஈடுபட்டனர். பொதுக்கூட்டம் நடைபெறும் மைதானம், சுற்று வட்டார பகுதிகள், பிரதமர் மோடி காரில் வந்து- செல்லும் சாலை ஆகியவற்றில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
இதற்காக வெளிமாவட்டங்களில் இருந்து ஏராளமான போலீசார் வரவழைக்கப்பட்டுள்ளனர். இவர்களுடன் சேர்ந்து குமரி மாவட்ட போலீசார் என மொத்தம் 3 ஆயிரம் பேர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர் என போலீஸ் சூப்பிரண்டு சுந்தரவதனம் தெரிவித்தார்.