பிரதமர் மோடி, அமித்ஷா மீது காங்கிரஸ் வழக்கு
காங்கிரஸ் பெண் எம்.பி. சுஷ்மிதாதேவ் என்பவர் இன்று சுப்ரீம்கோர்ட்டில் காங்கிரஸ் சார்பில் ஒரு மனுதாக்கல் செய்தார்.
பிரதமர் மோடி மற்றும் பா.ஜனதா தேசிய தலைவர் அமித்ஷா இருவர் மீதும் தேர்தல் கமிஷன் நடவடிக்கை எடுப்பது இல்லை என்று அவர் தனது மனுவில் புகார் கூறி உள்ளார். அந்த மனுவில் அவர் மேலும் கூறி இருப்பதாவது:-
பிரதமர் தேர்தல் பிரசார கூட்டங்களில் வெறுப்பை உமிழும் வகையில் பேசி வருகிறார்.கடந்த 23-ந்தேதி குஜராத்தில் அவர் வாக்களித்து விட்டு வந்த பிறகு தேர்தல் நடத்தை விதிகளை மீறி நடந்து கொண்டார்.
இதுபற்றி தேர்தல் ஆணையத்திடம் புகார் அளித்தோம். ஆனால் பிரதமர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. புகார் அளித்தவுடன் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்பது விதியாகும். ஆனால் தேர்தல் ஆணையம் பாரபட்சமாக நடந்து கொள்கிறது.
தேச பாதுகாப்பு தொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கைகளை தங்களது அரசின் சாதனை போல பேசி பிரசாரம் செய்யக்கூடாது என்று தேர்தல் ஆணையம் தடை விதித்துள்ளது. ஆனால் அந்த தடையை மீறி பிரதமர் பேசி வருகிறார். ராணுவம் பற்றி பேசி வாக்காளர்களை தூண்டி விடும் வகையில் பிரதமர் பேச்சு அமைந்துள்ளது.
இதுவும் அப்பட்டமான தேர்தல் விதி மீறலாகும். இது பற்றியும் தேர்தல் ஆணையத்திடம் புகார் அளித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
பிரதமர் போலவே பாரதிய ஜனதா தலைவர் அமித் ஷாவும் ராணுவத்தை பிரசாரத்துக்கு பயன்படுத்துகிறார். பாகிஸ்தானில் பயங்கரவாத முகாம்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதை பற்றி பேசி அவர் ஓட்டு கேட்கிறார்.
இதற்கு தடை விதிக்குமாறு தேர்தல் ஆணையத்திடம் பல தடவை முறையிட்டும் எந்த நடவடிக்கையும் எடுக்கப் படவில்லை.
எனவே பிரதமர் மீதும், அமித்ஷா மீதும் 24 மணி நேரத்தில் நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும். இந்த மனுவை அவசர வழக்காக கருதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ள வேண்டும்.
இவ்வாறு காங்கிரஸ் பெண் எம்.பி. சுஷ்மிதாதேவ் தனது மனுவில் கூறி இருந்தார். இந்த மனுவை சுப்ரீம்கோர்ட்டு தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் விசாரணைக்கு ஏற்றுக் கொண்டார். ஆனால் மனுவில் பிரதமர் மட்டுமே என்று கூறி இருப்பதாக குறிப்பிட்ட அவர் மோடி என்றும் குறிப்பிட வேண்டும் என்று உத்தரவிட்டார்.
காங்கிரசின் இந்த வழக்கு சுப்ரீம்கோர்ட்டில் நாளை விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படுகிறது.