X

பிரதமர் மோடியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று சந்திக்கிறார்

தி.மு.க. அலுவலக திறப்பு விழா மற்றும் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 4 நாள் பயணமாக டெல்லி சென்றுள்ளார்.இதையடுத்து இன்று பிற்பகலில் பிரதமர் மோடியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சந்தித்து பேச உள்ளார்.

அப்போது தமிழகத்துக்கு வரவேண்டிய நிதியை விடுவிக்க வேண்டும், மழை வெள்ளம் மற்றும் மாநில அரசின் திட்டங்களுக்கான நிதியை வழங்க வேண்டும், ஜி.எஸ்.டி. நிலுவை தொகையை முழுமையாக தரவேண்டும், மேகதாது அணை திட்டத்தை ரத்து செய்ய வேண்டும், இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர்கள் பாதிக்கப்படுவதற்கு ஒரு நிரந்தரத் தீர்வு காணப்பட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை அவர் பிரதமரிடம் வலியுறுத்த இருக்கிறார்.

குறிப்பாக ‘நீட்’ தேர்வில் இருந்து தமிழகத்துக்கு விலக்கு அளிக்கப்பட வேண்டும் என்பதை வலியுறுத்த உள்ளார். இந்த கோரிக்கைகள் அடங்கிய மனுவையும் பிரதமர் மோடியிடம், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்குகிறார். மேலும் ஏப்ரல் 2-ந்தேதி டெல்லியில் நடைபெறும் அண்ணா – கலைஞர் அறிவாலய திறப்பு விழாவுக்கும் அவர் அழைப்பு விடுக்கிறார்.

இதனைத்தொடர்ந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மத்திய அமைச்சர்கள் அமித்ஷா, ராஜ்நாத் சிங், நிதின் கட்கரி, நிர்மலா சீதாராமன், பியூஸ் கோயலை சந்திக்கிறார்.

காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தியையும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சந்திக்க உள்ளார்.