காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தனது சொந்த தொகுதியான கேரளாவின் வயநாட்டில் 3 நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். இதற்காக நேற்று கோழிக்கோடு வந்த அவர் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது நாட்டின் பொருளாதார மந்தநிலை, சர்ச்சைக்குரிய குடிமக்கள் திருத்த மசோதா உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் தொடர்பாக மத்திய அரசை குற்றம் சாட்டினார். இது தொடர்பாக ராகுல் காந்தி கூறியதாவது:-
பிரதமர் மோடியும், அமித்ஷாவும் தங்கள் சொந்த கற்பனை உலகத்தில் வாழ்கிறார்கள். அவர்களுக்கு வெளி உலகத்துடன் எந்த தொடர்பும் இல்லை. அவர்கள் சொந்த விஷயங்களை குறித்துதான் கற்பனை செய்கிறார்கள். இதனால்தான் நாடு பிரச்சினையில் சிக்கி தவிக்கிறது.
உண்மையில் நாட்டு மக்களை பிரதமர் மோடி கவனித்து இருந்தால், எந்த பிரச்சினையும் இருந்திருக்காது. நிஜத்தில் இருந்து மக்களை திசை திருப்புவதே மோடியின் நிர்வாகம் ஆகும். ஏனெனில் அவர் ஒரு கற்பனை உலகத்தில் வாழ்கிறார். இந்தியாவும் அதைப்போன்ற ஒரு கற்பனை உலகில் வசிக்க வேண்டும் என அவர் விரும்புகிறார். தற்போது அது உடைந்திருப்பதால் அவர் சிக்கலில் உள்ளார்.
இந்தியா அனைவருக்குமானது. அதாவது அனைத்து இனம், அனைத்து மதம், அனைத்து கலாசாரம் என அனைத்துக்குமானதுதான் இந்தியா. இதுதான் எங்கள் நம்பிக்கை ஆகும்.
இந்த நாட்டை சேர்ந்த யாருக்கு எதிராகவும் எந்தவகையான பாகுபாட்டையும் காங்கிரஸ் கட்சி எதிர்க்கும். இந்த பாகுபாட்டை வெளிப்படுத்துவோருக்கு நாங்கள் எதிரானவர்கள். எனவே முஸ்லிம் அல்லாத பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்காளதேச அகதிகளுக்கு குடியுரிமை வழங்க வகை செய்யும் சர்ச்சைக்குரிய குடிமக்கள் திருத்த மசோதாவை காங்கிரஸ் கட்சி கடுமையாக எதிர்க்கும்.
இவ்வாறு ராகுல் காந்தி கூறினார்.
வயநாடு தொகுதியில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்ற ராகுல் காந்தி வண்டூரில் உள்ள பள்ளி ஒன்றில் அறிவியல் ஆய்வுக்கூடத்தை திறந்து வைத்து பேசினார். அப்போது வயநாடு தொகுதிக்கு உட்பட்ட பள்ளி ஒன்றில் சமீபத்தில் வகுப்பறையில் பாம்பு கடித்து மாணவி ஒருவர் உயிரிழந்த சம்பவத்தை நினைவு கூர்ந்தார்.
அவர் கூறுகையில், ‘நாட்டிலேயே கேரள பள்ளிகளின் நிலைமைதான் மிகவும் சிறப்பாக உள்ளது. ஆனாலும் இது போதாது. சமீபத்தில் பள்ளியில் பாம்பு கடித்து மாணவி ஒருவர் இறந்துள்ளார். எனவே பள்ளிகளின் உள்கட்டமைப்பை மேம்படுத்த மத்திய-மாநில அரசுகள் உதவ வேண்டும். எனது தொகுதிக்கு உட்பட்ட பள்ளிகளை மேம்படுத்த எனது தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து உதவுவேன். மேலும் இந்த பிரச்சினையை நாடாளுமன்றத்திலும் எழுப்புவேன்’ என்று தெரிவித்தார்.
பின்னர் வயநாட்டில் நடந்த ஐக்கிய ஜனநாயக முன்னணி கூட்டம் ஒன்றில் ராகுல் காந்தி பேசினார். இதில் தன் மீதான வழக்குகள் குறித்து அவர் பேசினார்.
இது தொடர்பாக அவர் கூறும்போது, ‘எனக்கு எதிராக 15 அல்லது 16 வழக்குகள் உள்ளன. ராணுவ வீரர்களின் நெஞ்சில் பதக்கங்கள் குத்தியிருப்பதை நீங்கள் பார்த்திருப்பீர்கள். அதைப்போலவே ஒவ்வொரு வழக்கும் எனக்கு பதக்கம்தான். தத்துவார்த்த ரீதியாக போராடுவதில் அதிக வழக்குகள் இருப்பதால் எனக்கு மகிழ்ச்சியே. ஒவ்வொரு முறை நீங்கள் என்மீது வழக்கு போடும்போதும், நான் அன்பை பற்றியே பேசுவேன். இதில் எனக்கு ஆதரவாக இருக்கும் உங்களை ஒருபோதும் நான் மறக்கமாட்டேன்’ என்று குறிப்பிட்டார்.