Tamilசெய்திகள்

பிரதமர் மோடியுடன் தமிழக பா.ஜ.க எம்.எல்.ஏ-க்கள் சந்திப்பு

வடமாநிலங்களில் கோலோச்சும் பா.ஜனதா தென் மாநிலங்களில் குறிப்பாக தமிழ்நாட்டில் காலூன்ற முடியாமல் பல ஆண்டுகளாக போராடி வருகிறது. கடந்த சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.க.வுடன் கைகோர்த்து தேர்தலை சந்தித்தது.

ஆளுங்கட்சியுடன் கூட்டணி அமைந்ததால் வெற்றி நிச்சயம் என்றும், இந்த தேர்தலில் எப்படியாவது வெற்றிபெற வேண்டும் என்பதற்காகவும் டெல்லி தலைவர்கள் வியூகம் அமைத்து கொடுத்தனர்.

தமிழகத்தை போலவே பா.ஜனதா காலூன்ற முடியாத வடகிழக்கு மாநிலங்களில் பா.ஜனதா வெற்றிக்கு காரணமாக இருந்த அகில இந்திய செயலாளர் சி.டி.ரவியை தமிழகத்தில் தேர்தல் பொறுப்பாளராக நியமித்தனர்.

அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோரை அமித்ஷா சந்தித்து பேசி கூடுதல் தொகுதிகள் ஒதுக்கும்படி வற்புறுத்தினார். இதையடுத்து பா.ஜனதாவுக்கு 20 தொகுதிகள் ஒதுக்கப்பட்டது.

இந்த தொகுதிகளின் கள நிலவரத்தை ஆய்வு செய்து 15 தொகுதிகளை வெற்றிபெற வாய்ப்புள்ள தொகுதியாக கண்டறிந்து அந்த தொகுதிகளில் மட்டும் தனிக்கவனம் செலுத்தினார்கள். ஆர்.எஸ்.எஸ். உள்ளிட்ட அமைப்பு பிரதிநிதிகள் களத்தில் இறங்கி தீவிரமாக தேர்தல் பணியிலும் ஈடுபட்டார்கள்.

இருப்பினும் அ.தி.மு.க. கூட்டணி தோல்வியை தழுவியது. ஆனால் பா.ஜனதா 4 தொகுதிகளில் வெற்றிபெற்றது. இந்த வெற்றியின் மூலம் 20 ஆண்டுகளுக்கு பிறகு சட்டமன்றத்துக்குள் பா.ஜனதா நுழைந்துள்ளது.

பிரதிநிதித்துவமே இல்லாத தமிழகத்தில் எண்ணிக்கை குறைவாக இருந்தாலும் தடம் பதித்தது தேசிய அளவில் தலைவர்களை மகிழ்ச்சி அடைய வைத்தது.

அதேபோல் புதுவையிலும் என்.ஆர்.காங்கிரசுடன் கூட்டணி அமைத்து 6 இடங்களில் பா.ஜனதா வென்றது. முதல்முறையாக அந்த மாநில மந்திரிசபையிலும் இடம்பிடித்துள்ளது. இதையடுத்து புதுவை பா.ஜனதா எம்.எல்.ஏ.க்கள் கடந்த வாரம் டெல்லி சென்று பிரதமர் மோடியை சந்தித்து வாழ்த்து பெற்றார்கள்.

அதேபோல தமிழக எம்.எல்.ஏ.க்கள் 4 பேரும் மோடியிடம் வாழ்த்து பெறுவதற்காக இன்று டெல்லி சென்றனர். 4 எம்.எல்.ஏ.க்களில் வானதி சீனிவாசன் நட்சத்திர வேட்பாளரான நடிகர் கமல்ஹாசனை எதிர்த்து கோவை தெற்கு தொகுதியில் போட்டியிட்டு வெற்றிபெற்றார்.

எம்.ஆர்.காந்தி நாகர்கோவில் தொகுதியில் தி.மு.க. முன்னாள் அமைச்சர் சுரேஷ்ராஜனை வீழ்த்தி வெற்றிபெற்றார்.

மொடக்குறிச்சி தொகுதியில் தி.மு.க.வின் பலமான வேட்பாளரான சுப்புலட்சுமி ஜெகதீசனை எதிர்த்து போட்டியிட்டு டாக்டர் சரஸ்வதி வென்றார்.

நெல்லை தொகுதியில் முன்னாள் அமைச்சர் நயினார் நாகேந்திரன் வென்றார்.

4 எம்.எல்.ஏ.க்களும் தமிழக பா.ஜனதா தலைவர் எல்.முருகன் தலைமையில் டெல்லியில் இன்று காலை 11 மணியளவில் பிரதமர் மோடியை சந்தித்து வாழ்த்து பெற்றனர்.

இந்த முறை தமிழக சட்டமன்றத்தில் பா.ஜனதா எம்.எல்.ஏ.க்கள் இருப்பார்கள் என்று நம்பிக்கையுடன் தொடர்ந்து கூறிவந்த மாநில தலைவர் எல்.முருகன், நம்பிக்கை வீண்போகவில்லை என்று மகிழ்ச்சி தெரிவித்தார்.

பிரதமர் மோடி எம்.எல்.ஏ.க்களுக்கு வாழ்த்து தெரிவித்ததோடு ‘மக்கள் பணியை சிறப்பாக செய்யுங்கள், அதன் மூலம் மக்கள் மனதில் இடம் பிடியுங்கள்’ என்று அறிவுரை வழங்கினார்.

மதியம் 1 மணி அளவில் அகில இந்திய பா.ஜனதா தலைவர் ஜே.பி.நட்டாவை 4 எம்.எல்.ஏ.க்களும் சந்திக்க உள்ளனர்.