பிரதமர் மோடியுடன் அமெரிக்க அதிபர் பேச்சு வார்த்தை!

ஈராக் தலைநகர் பாக்தாத்தில் உள்ள சர்வதேச விமான நிலையம் அருகே கடந்த வெள்ளிக்கிழமை அமெரிக்க ராணுவம் நடத்திய வான்வழி தாக்குதலில் ஈரான் ராணுவ தளபதி காசிம் சுலைமானி கொல்லப்பட்டார். இதனால் இருநாடுகளுக்கு இடையிலான மோதல் வலுவடைந்து போர் பதற்றம் அதிகரித்துள்ளது.

பல்வேறு உலக நாடுகளும் அமெரிக்கா-ஈரான் இடையேயான போர்ப்பதற்றங்களை தணிக்க முயற்சிகள் மேற்கொண்டு வருகின்றன.

இந்நிலையில், பிரதமர் நரேந்திர மோடி அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்புடன் நேற்று இரவு தொலைபேசியில் தொடர்புகொண்டு பேச்சுவார்த்தை நடத்தினார்.

இது தொடர்பாக பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘அமெரிக்கா இந்திய இடையேயான உறவுகள் மேலும் வலுப்பெற்று வருவதாக பிரதமர் மோடி கூறியுள்ளார். அமெரிக்க மக்களுக்கும் அதிபர் டொனால்ட் டிரம்பிற்கும் புத்தாண்டு வாழ்த்துக்களையும் பிரதமர் மோடி தெரிவித்தார். இந்தியாவுடனான நல்லுறவை மேம்படுத்த தயாராக உள்ளதாக டிரம்பும் தெரிவித்துள்ளார்’, என கூறப்பட்டுள்ளது.

முன்னதாக, அமெரிக்காவால் கொல்லப்பட்ட ஈரான் படைத்தளபதி சுலைமானிக்கு, இந்தியாவில் நடந்த தாக்குதல்களிலும் பங்கு உண்டு என டிரம்ப் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools