பிரதமர் மோடியின் ஹெலிகாப்டர் ராகுல் காந்தி இடத்திற்கு சென்றதால் பரபரப்பு
தேனி பாராளுமன்ற தொகுதியில் அ.தி.மு.க. வேட்பாளராக துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தின் மகன் ரவீந்திரநாத்குமார் போட்டியிடுகிறார். ஆண்டிப்பட்டி சட்டமன்ற தொகுதியில் அ.தி.மு.க. வேட்பாளராக லோகிராஜனும், பெரியகுளம் சட்டமன்ற தொகுதி அ.தி.மு.க. வேட்பாளராக மயில்வேலும் போட்டியிடுகின்றனர்.
இவர்களை ஆதரித்து பிரசாரம் செய்ய ஆண்டிப்பட்டி அருகே எஸ்.எஸ்.புரத்தில் நாளை (13-ந் தேதி) பிரதமர் நரேந்திரமோடி தேனி வருகிறார். இதற்காக பிரசார மேடை மற்றும் ஹெலிகாப்டர் தளம் அமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
இதே போல தேனி அன்னஞ்சிபிரிவு அருகே இன்று மாலை தேனி பாராளுமன்ற தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனை ஆதரித்து அகில இந்திய காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி பிரசாரம் செய்ய உள்ளார். இதற்காக மேடை அருகே ஹெலிகாப்டர் தளம் அமைக்கப்பட்டுள்ளது.
தேனியில் பிரதமர் மோடியும், காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தியும் அடுத்தடுத்து வருகை தருவதால் உச்சகட்ட பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மோடி பங்கேற்கும் பொதுக் கூட்டத்துக்கு மதுரையில் இருந்து கூட்டம் நடக்கும் ஆண்டிப்பட்டி பிரசார மேடைப்பகுதியில் உள்ள ஹெலிகாப்டர் தளத்துக்கு ராணுவ ஹெலிகாப்டர் சோதனை ஓட்டம் நடத்தி பார்க்கப்பட்டது. ராணுவ ஹெலிகாப்டர் மோடி பங்கேற்கும் ஆண்டிப்பட்டி தளத்தில் இறங்குவதற்கு பதிலாக தேனியில் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்திக்கு அமைக்கப்பட்ட ஹெலிகாப்டர் தளத்தில் வந்து இறங்கியது.
சிறிது நேரம் கழித்தே தவறுதலாக தரை இறங்கியது பைலட்டுக்கு தெரிய வந்தது. இதனையடுத்து விரைவாக அங்கிருந்து கிளம்பிய ராணுவ ஹெலிகாப்டர் ஆண்டிப்பட்டியில் மோடிக்கு அமைத்திருந்த தளத்துக்கு சென்றது. இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. அதனைத் தொடர்ந்து அதிகாரிகள் மீண்டும் ஒரு முறை சோதனை ஓட்டம் நடத்தி இடத்தை உறுதி செய்தனர்.