பிரதமர் மோடியின் ‘மன் கி பாத்’ நிகழ்ச்சிக்கு நிரந்தரமாக 23 கோடி ரசிகரக்ள் – ஆய்வில் தகவல்
பிரதமர் மோடி, மாதந்தோறும் கடைசி ஞாயிற்றுக்கிழமையில் வானொலியில் ‘மன் கி பாத்’ (மனதின் குரல்) என்ற நிகழ்ச்சியில் பங்கேற்று பேசி வருகிறார். அதன் 100-வது பகுதி, வருகிற ஞாயிற்றுக்கிழமை ஒலிபரப்பாகிறது.
இந்நிலையில், அரியானா மாநிலம் ரோதக்கில் உள்ள ஐ.ஐ.எம்.மில் படிக்கும் மாணவர்கள், ‘மன் கி பாத்’ நிகழ்ச்சிக்கான வரவேற்பு குறித்து நாட்டின் 4 பகுதிகளிலும் எல்லா வயதையும் சேர்ந்த மொத்தம் 10 ஆயிரத்துக்கு மேற்பட்டோரை சந்தித்து கருத்து கணிப்பு நடத்தினர். பெரும்பாலானோர், சுயதொழில் செய்பவர்கள் ஆவர்.
இதில், 100 கோடிக்கு மேற்பட்டோர் ஒருதடவையாவது ‘மன் கி பாத்’ நிகழ்ச்சியை கேட்டிருப்பது தெரியவந்தது. 41 கோடி பேர் எப்போதாவது கேட்கிறார்கள். 23 கோடி பேர், தொடர்ந்து கேட்கிறார்கள். ஆனால், வெறும் 17.6 சதவீதம்பேர் மட்டுமே வானொலியில் கேட்கிறார்கள். பெரும்பாலானோர் டி.வி. சேனல்களிலும், செல்போன்களிலும் தான் அந்நிகழ்ச்சியை கேட்கிறார்கள்.
65 சதவீதம் பேர் இந்தியிலும், 18 சதவீதம் பேர் ஆங்கிலத்திலும், 2 சதவீதம் பேர் தமிழிலும் அந்நிகழ்ச்சியை கேட்க விரும்புவதாக தெரிவித்தனர். 73 சதவீதம் பேர், மத்திய அரசின் செயல்பாடுகளில் திருப்தி தெரிவித்தனர்.