பிரதமர் நரேந்திர மோடியின் 70-வது பிறந்தநாள் விழா, தமிழக பா.ஜ.க. மீனவர் அணி சார்பில் சென்னை ஐஸ்ஹவுஸ் பகுதியில் நேற்று கொண்டாடப்பட்டது. விழாவில் சிறப்பு விருந்தினராக நடிகையும், பா.ஜ.க. செயற்குழு உறுப்பினருமான நமீதா கலந்து கொண்டார். பின்னர் அந்த பகுதி பொதுமக்களுக்கு இலவசமாக மீன்கள் வழங்கினார்.
சூரை, சங்கரா, சீலா, அயிலா வகை மீன்கள் சுமார் 370 கிலோ அளவில் பொதுமக்களுக்கு இலவசமாக வழங்கப்பட்டது. இலவச மீன்கள் பெற வந்தவர்கள் நடிகை நமீதாவுடன் ஆர்வமாக ‘செல்பி’ எடுத்துக் கொண்டனர். நமீதாவும் பெரிய, பெரிய மீன்களை கையில் ஏந்தி உற்சாகமாக ‘போஸ்’ கொடுத்தார்.
முன்னதாக நமீதா நிருபர்களிடம் கூறுகையில், “பிரதமர் மோடி பிறந்தநாள் எனும் பொது நிகழ்ச்சியில் முதன்முதலில் பங்கேற்பது மகிழ்ச்சி அளிக்கிறது. இது கொஞ்சம் வித்தியாசமாக இருக்கிறது. ஆனால் எனது கட்சி பா.ஜ.க. மீனவர்களுக்கு பல்வேறு நலத்திட்டங்களை வழங்கியிருக்கிறது. இந்த பெருமை எனக்கு உண்டு. பிறந்தநாள் வாழ்த்துகள் மோடிஜி”, என்றார். நடிகை நமீதாவை காண ஏராளமானோர் திரண்டதால் ஐஸ்ஹவுஸ் பகுதி நேற்று பரபரப்பாக காணப்பட்டது.