பிரதமர் மோடியின் பிரம்மாண்டமான பேரணி – வாராணசியில் பலத்த பாதுகாப்பு

பாராளுமன்றத் தேர்தலில் உத்தரபிரதேசத்தின் வாரணாசி தொகுதியில் பிரதமர் மோடி போட்டியிடுகிறார். நாளை தனது வேட்பு மனுவை தாக்கல் செய்ய உள்ளார். இதையொட்டி, வாரணாசியில் இன்று பிரம்மாண்ட பேரணி நடத்துகிறார். இதனால் வாரணாசியின் அனைத்து பகுதிகளிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

முதலில், வாரணாசியில் பனாரஸ் ஹிந்து பல்கலைக்கழகத்திற்கு செல்லும் மோடி, அந்த பல்கலைக்கழக நிறுவனரான மறைந்த மதன் மோகன் மாளவியா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்துகிறார். இதையடுத்து, சாலை மார்க்கமாக மோடி பிற்பகல் 3 மணிக்கு பேரணி செல்கிறார்.

வாரணாசியில் உள்ள தாசாஸ்வமேத் நதிமுகத்துவார பகுதி வரை பேரணி நடைபெறுகிறது. இந்தப் பேரணியில் பாஜக மூத்த தலைவர்கள், மத்திய மந்திரிகள் கலந்து கொள்ள உள்ளனர். இதையடுத்து கங்கை நதியில் ஆரத்தி எடுத்து மோடி வழிபாடு நடத்துகிறார்.

நாளை வேட்பு மனு தாக்கலுக்கு முன்பாக, கன்டோன்மென்ட் பகுதியில் உள்ள ஹோட்டலில் பாஜக தொண்டர்களுடன் காலையில் மோடி ஆலோசனை நடத்துகிறார். பின்னர் கால பைரவர் கோயிலில் வழிபாடு நடத்துகிறார். இந்த வழிபாட்டை முடித்துக் கொண்டு, புறப்படும் அவர், 11.30 மணியளவில் வேட்பு மனுவை தாக்கல் செய்ய உள்ளார்.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools