விருதுநகர் பட்டம்புதூரில் தென்மண்டல தி.மு.க. மாநாடு நேற்று நடைபெற்றது. விருதுநகர் தெற்கு மாவட்ட செயலாளர் சாத்தூர் ராமச்சந்திரன் எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். மாநாட்டில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:-
அவலம் மிகுந்த ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் விருதுநகர் மண்ணில் நடைபெறும் இந்த பேரணி பொதுக்கூட்டம், மாவட்ட மாநாடா, மாநில மாநாடா என்று வியக்கும் வகையில் உள்ளது.
விருதுநகர் மாவட்ட செயலாளர்கள் சாத்தூர் ராமச்சந்திரன் எம்.எல்.ஏ. மற்றும் தங்கம் தென்னரசு எம்.எல்.ஏ. ஆகியோர் குறுகிய காலஅவகாசத்தில் இந்த ஏற்பாட்டை செய்துள்ளனர். சிவகங்கை சமஸ்தானத்தில் தளபதிகளாக பெரிய மருது, சின்ன மருது இருந்தனர். சிவகங்கை சமஸ்தானத்தில் ஆட்சி செய்தாலும், அவர்கள் பிறந்தது விருதுநகர் மாவட்டத்தில் உள்ள முக்குளம் தான். அதேபோன்று இவர்கள் 2 பேரும் பெரிய மருது, சின்ன மருதுவாக செயல்பட்டு இந்த மாநாட்டு ஏற்பாட்டை செய்துள்ளனர்.
விருதுநகர் மாவட்டம் 2 முதல்-அமைச்சர்களை தந்த மாவட்டம். பி.எஸ்.குமாரசாமி ராஜா, பெருந்தலைவர் காமராஜர் ஆகிய 2 பேரும் விருதுநகர் மாவட்டத்தை சேர்ந்தவர்கள். தமிழ்நாடு என்று பெயர் வைக்க உயிர்நீத்த தியாகி சங்கரலிங்கனார் விருதுநகர் மாவட்டத்தை சேர்ந்தவர் தான்.
இவ்வாறு அரசியல் பாரம்பரியமிக்க விருதுநகர் மண்ணில் நடைபெற உள்ள பாராளுமன்ற தேர்தலுக்கான பிரசாரத்தை தொடங்குவதில் மகிழ்ச்சி அடைகிறேன்.
சென்னைக்கு அருகில் அ.தி.மு.க., பா.ஜ.க. கூட்டம் நடந்து முடிந்துள்ளது. இந்த கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, தி.மு.க., காங்கிரஸ் கூட்டணி சந்தர்ப்பவாத கூட்டணி என்று கூறி கேள்வி எழுப்பி உள்ளார். எது சந்தர்ப்பவாத கூட்டணி? தி.மு.க.வும், காங்கிரசும் இந்திராகாந்தி முதல் சோனியாகாந்தி தொடர்ந்து, ராகுல்காந்தி வரை கூட்டணி அமைத்துள்ளோம். இதுதவிர நாடு ஆபத்தை சந்திக்கும்போதெல்லாம் தி.மு.க.வும், காங்கிரசும் கைகோர்த்து உள்ளது.
பா.ஜ.க.வும், அ.தி.மு.க.வும் அமைத்துள்ள கூட்டணி, என்ன கூட்டணி என்று தெரியவில்லை. ஊழலற்ற ஆட்சி அமைப்போம் என கூறும் பிரதமர் மோடி, தமிழகத்தில் குட்கா ஊழல் உள்ளிட்ட பல்வேறு ஊழல் வழக்குகள் உள்ள நிலையில் அ.தி.மு.க.வுடன் கூட்டணி வைத்துள்ளார்.
கூட்டத்தில் பேசிய துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், பிரதமர் மோடி ஆட்சியில் நாடு வளர்ச்சி கண்டுள்ளது என்று கூறியுள்ளார். தமிழகத்தில் ஏதேனும் வளர்ச்சி ஏற்பட்டுள்ளதா? ஜெயலலிதா இருந்தால், பா.ஜ.க.வுடன் கூட்டணி சேர்ந்திருப்பார் என்று கூறியுள்ளார். கடந்த 2014-ம் ஆண்டு தேர்தலில் அ.தி.மு.க.வுடன் கூட்டணி சேர பிரதமர் மோடி, ஜெயலலிதாவை நேரில் வந்து சந்தித்தார். பல தூதர்களை அனுப்பினார். ஆனால் ஜெயலலிதா உடன்படாமல் மோடியா அல்லது இந்த லேடியா என்று கூறினார்.
பிரதமர் மோடி, தற்போது தமிழகத்திற்கு அடிக்கடி வரத்தொடங்கியுள்ளார். கன்னியாகுமரி பொதுக்கூட்டத்தில் பேசும்போது, எனக்கு குடும்பம் கிடையாது. நாட்டின் 130 கோடி மக்கள் தான் என் குடும்பம். நான் வாழ்ந்தாலும் மக்களுடன் தான் வாழ்வேன். வீழ்ந்தாலும் மக்களுடன் தான் வீழ்வேன் என்றார். ஆனால் உண்மையில் 130 கோடி மக்களையும் நடுத்தெருவில் நிற்கவைத்துவிட்டார்.
1,000, 500 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று நள்ளிரவில் அறிவித்து, நாட்டின் பொருளாதாரத்தை பாழ்படுத்தி மக்களை நடுத்தெருவில் நிற்கவைத்துவிட்டார். தற்போது அவர் மேடையிலேயே ஜெயலலிதா படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்துகிறார். ஜெயலலிதா சாதனைகளை வரும் தலைமுறையும் மறக்க முடியாது என்று பேசுகிறார்.
ஜெயலலிதாவுடன் நமக்கு கருத்து வேறுபாடு, மாறுபாடுகள் இருக்கலாம். ஆனால் அவர் பா.ஜனதாவுடன் கூட்டணி வைத்துக்கொள்ளவில்லை. ஜெயலலிதா உயிருடன் இருந்திருந்தால், அவர் தற்போது சசிகலாவுடன் தான் இருந்திருப்பார். ஊழல் குற்றச்சாட்டுகளால் 2 முறை முதல்-அமைச்சர் பதவியை துறந்தவர். பெங்களூருவுக்கு முதல்-அமைச்சராக விமானத்தில் சென்ற அவர், அங்கு நீதிமன்றத்தால் சிறையில் அடைக்கப்பட்டார். இதுதான் ஜெயலலிதாவின் சாதனை.
முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, மோடியின் ஆட்சியில் தமிழகம் முன்னேற்றம் அடைந்தது என்று கூறியுள்ளார். என்ன முன்னேற்றம் கண்டுள்ளது?
எடப்பாடி பழனிசாமி, பிரதமர் மோடி விலைவாசி உயராமல் கட்டுப்படுத்தியுள்ளார் என்று கூறுகிறார். நான் கேட்கிறேன், முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி எதாவது ஒரு கிராமத்தை தத்தெடுத்து அங்கு வரட்டும். நானும் அங்கு வருகிறேன். அவர் தொகுதியில் உள்ள கிராமத்தை கூட அவர் தேர்வு செய்யட்டும். விலைவாசி உயர்ந்துள்ளதா என்பதை கிராம மக்கள் கூறுவர். சட்டம்-ஒழுங்கு சிறப்பாக இருக்கிறது என்கிறார்கள். குட்கா ஊழலால், அவர் அமைச்சரவையில் இருக்கும் மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சராக இருக்கும் விஜயபாஸ்கர் வீட்டில் சி.பி.ஐ. வழக்கு உள்ளது.
அமைச்சர் வீட்டிலும், தலைமை செயலகத்திலும் வருமான வரித்துறை சோதனை நடத்தினர். அமலாக்கத்துறை வழக்குகள் உள்ளன. பதவியில் இருக்கும் டி.ஜி.பி. மீது குட்கா ஊழல் தொடர்பான வழக்கு உள்ளது. இந்த நிலையில்தான் தற்போது தமிழக சட்டம்-ஒழுங்கு உள்ளது.
பாராளுமன்ற துணை சபாநாயகராக இருக்கும் தம்பித்துரை, பா.ஜ.க. ஆட்சியில் எந்த திட்டமும் வெற்றி அடையவில்லை என குற்றம் சாட்டுகிறார். அவர் இந்த குற்றச்சாட்டினை பாராளுமன்றத்திலேயே தெரிவிக்கிறார். ஆனால் தற்போது பா.ஜ.க.வுடன் அ.தி.மு.க. கூட்டணி வைத்துள்ளது. பொதுக்கூட்ட மேடையில் பிரதமர் மோடியின் அருகிலேயே தம்பிதுரை அமர்ந்துள்ளார். ஒட்டுமொத்தத்தில் அதிகாரத்தை தக்கவைத்துக்கொள்வதற்கும், ஆட்சியை காப்பாற்றிக்கொள்வதற்கும்தான் அ.தி.மு.க., பா.ஜ.க.வுடன் சந்தர்ப்பவாத கூட்டணியை அமைத்துள்ளது.
இவ்வாறு மு.க.ஸ்டாலின் பரபரப்பாக பேசினார்.