இந்திய பிரதமர் நரேந்திர மோடி அரசுமுறைப் பயணமாக அமெரிக்காவில் 7 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். இதற்காக நேற்று முன்தினம் இரவு டெல்லியில் இருந்து புறப்பட்ட அவர் நேற்று அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தின் ஹூஸ்டன் நகர் சென்றடைந்தார்.
அங்கு அவரை வரவேற்க இந்திய மற்றும் அமெரிக்க அதிகாரிகள் விமான நிலையத்தில் தயாராக இருந்தனர். விமானத்தில் இருந்து பிரதமர் மோடி கீழே இறங்கியதும் அவருக்கு பெண் அதிகாரி ஒருவர் பூங்கொத்துகளை வழங்கினார். அதிலிருந்த சில பூக்கள் சிவப்பு கம்பளத்தில் விழுந்தன. உடனடியாக பிரதமர் மோடி கீழே குனிந்து அந்த பூக்களை எடுத்து தனது பாதுகாப்பு அதிகாரியிடம் அளித்தார்.
பாதுகாப்பு அதிகாரிகள் இருந்தபொழுதும், அதைப்பற்றி கவலை கொள்ளாமல் அவர் எளிமையாக நடந்து கொண்டது தொடர்பான காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியானது.
இது நெட்டிசன்களிடையே பிரதமர் மோடியை உயர்வாக எண்ணும் வகையில் ஒரு தாக்கத்தை ஏற்படுத்திவிட்டது.
இதுபற்றி டுவிட்டரில் ஒருவர், செடியின் ஒரு பகுதியான பூவை காலால் நசுக்கி விடக்கூடாது என்ற நம்பிக்கையிலா? அல்லது தூய்மை திட்டத்தின் ஒரு பகுதியாக இந்த செயலா? என பதிவிட்டுள்ளார்.
இதேபோல் மற்றொருவர், தனக்கு வழங்கிய பூங்கொத்துகளில் இருந்து கீழே விழுந்த ஒரு பூவையோ அல்லது செடியின் தண்டையோ உடனே பிரதமர் மோடி எடுத்து தனது பாதுகாவலரிடம் கொடுத்தது அவரது எளிமையை காட்டுகிறது என குறிப்பிட்டுள்ளார்.
பிரதமரின் இந்த செயல், அவர் எந்தவொரு நிகழ்ச்சி நிரலையும் பற்றி பொருட்படுத்துபவர் இல்லை. மக்களுடன் மக்களாக இணைந்து இருப்பவர் என்பதையே காட்டுகிறது என மற்றொருவர் தெரிவித்துள்ளார். பிரதமர் மோடியின் எளிமைக்கு நெட்டிசன்கள் பலர் தொடர்ந்து தங்களது பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.