Tamilசெய்திகள்

பிரதமர் மோடியின் அழைப்பை நிராகரித்த சரத் பவார்!

சட்டசபை தேர்தலுக்கு பிறகு மகாராஷ்டிராவில் அரங்கேறிய பல்வேறு அரசியல் நாடகங்களுக்கு பின்னர் சிவசேனா கட்சி, தேசியவாத காங்கிரஸ், காங்கிரசுடன் இணைந்து ஆட்சி அமைத்தது. சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே முதல்-மந்திரியாக பதவி ஏற்றார்.

இந்த கூட்டணி அமைய முக்கிய காரணம் தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் ஆவார். தனது குடும்பத்தை சேர்ந்த அஜித்பவார் பாரதீய ஜனதாவுக்கு திடீர் ஆதரவு அளித்து போக்கு காட்டியபோதும், தனது ஆளுமை திறனால் சரத்பவார் கட்சி எம்.எல்.ஏ.க்களை ஒற்றுமையுடன் வைத்திருந்து ஆட்சி மாற்றத்திற்கு வித்திட்டார்.

இது குறித்து தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்த பேட்டியில் சரத்பவார் கூறியதாவது:-

பிரதமர் நரேந்திர மோடி ஒன்றாக இணைந்து செயல்பட (மகாராஷ்டிராவில் ஆட்சியமைக்க) எனக்கு அழைப்பு விடுத்தார். அவரிடம் நான், நமது தனிப்பட்ட உறவு நல்ல முறையில் இருக்கிறது. அது அப்படியே தொடர வேண்டும். ஆனால் ஒன்றிணைந்து செயல்படுவது சாத்தியமற்றது என கூறி விட்டேன். பாரதீய ஜனதாவை ஆதரித்து இருந்தால் என்னை நாட்டின் ஜனாதிபதி ஆக்குவதற்கு மோடி முன்வந்ததாக கூறப்படும் செய்தியில் உண்மை இல்லை.

இருப்பினும் நிச்சயமாக பிரதமர் மோடி தலைமையிலான மந்திரி சபையில் எனது மகள் சுப்ரியா சுலேவை இணைத்துக்கொள்ள வாய்ப்பு இருந்தது.

அஜித்பவார், தேவேந்திர பட்னாவிஸ் அரசுக்கு ஆதரவு அளித்த தகவல் கிடைத்தவுடன் நான் முதலில் தொடர்புகொண்டது முதல்-மந்திரி உத்தவ் தாக்கரேவை தான். நடந்த சம்பவம் சரியல்ல. அஜித்பவாரின் செயலை நான் நசுக்குவேன் என நம்பிக்கை அளித்தேன்.

அஜித்பவாரின் நடவடிக்கைக்கு எனது ஆதரவு இல்லை என தேசியவாத காங்கிரஸ் கட்சியினர் அனைவருக்கும் தெரியவந்தவுடன் அவருடன் இருந்த எம்.எல்.ஏ.க்களுக்கு அழுத்தம் ஏற்பட்டது. அவர்கள் திரும்பி வந்தார்கள்.

இவ்வாறு அவர் கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *