பிரதமர் மோடிக்கு 72 ஆண்டுகள் தடை விதிக்க வேண்டும் – அகிலேஷ் யாதவ் வலியுறுத்தல்

மேற்கு வங்காளம் மாநிலம், ஹூக்ளி மாவட்டத்தில் உள்ள சேரம்பூர் நகரில் நேற்று நடைபெற்ற பாஜக தேர்தல் பிரசார கூட்டத்தில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, ‘மே 23-ம் தேதி தேர்தல் முடிவுகள் வெளியாகும்போது நாடு முழுவதும் தாமரை மலரும். மம்தாவிடம் இருக்கும் எம்.எல்.ஏ.க்கள் அவரை விட்டு விலகுவார்கள். இன்றைய நிலவரப்படி அவரது திரிணாமூல் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த 40 எம்.எல்.ஏ.க்கள் என்னுடன் தொடர்பில் இருக்கிறார்கள்’ என்று கூறினார்.

இந்த கருத்துக்கு மம்தா பானர்ஜி உள்பட பல்வேறு அரசியல் பிரமுகர்கள் கண்டனம் தெரிவித்துவரும் நிலையில் தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறிய பிரதமர் மோடிக்கு 72 ஆண்டுகள் தடை விதிக்க வேண்டுமென உத்தரப்பிரதேசம் மாநில முன்னாள் முதல் மந்திரியும் சமாஜ்வாதி கட்சி தலைவருமான அகிலேஷ் யாதவ் இன்று வலியுறுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக லக்னோ நகரில் இன்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அகிலேஷ் யாதவ், ’நாட்டின் முன்னேற்றத்தை பற்றி பேச வேண்டிய பிரதமர் 125 கோடி மக்களின் நன்மதிப்பையும் நம்பிக்கையையும் இழந்த பின்னர் மாற்றுக்கட்சி எம்.எல்.ஏ.க்களை கையில் வைத்திருப்பதாக மிரட்டுகிறார்.

மோடியின் இத்தகைய கருப்புப்பண மனப்பான்மைக்காக தேர்தல் கமிஷன் அவருக்கு 72 மணிநேரம் மட்டுமல்ல; 72 ஆண்டுகளுக்கு தடை விதிக்க வேண்டும்’ என குறிப்பிட்டார்.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools