X

பிரதமர் மோடிக்கு 70வது பிறந்தநாள் – தலைவர்கள் வாழ்த்து

பிரதமர் மோடியின் 70-வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. நாடு முழுவதும் பாஜகவினர் கேக் வெட்டியும், பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கியும் கொண்டாடி வருகின்றனர்.

மோடியின் பிறந்தநாளையொட்டி அவருக்கு அரசியல் தலைவர்கள், கட்சி நிர்வாகிகள், பிரபலங்கள், வெளிநாடுகளின் தலைவர்கள் என பல்வேறு தரப்பினரும் வாழ்த்து தெரிவித்த வண்ணம் உள்ளனர். ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், பாஜக தலைவர் ஜே.பி.நட்டா, மத்திய மந்திரிகள் ராஜ்நாத் சிங், ஜெய்சங்கர், கிரண் ரிஜிஜு, ஜிதேந்திர சிங் உள்ளிட்ட பலர் டுவிட்டரில் வாழ்த்துக்களை பதிவு செய்துள்ளனர்.

ரஷிய அதிபர் புதின், நேபாள பிரதமர் ஷர்மா ஒலி உள்ளிட்ட உலக தலைவர்கள் மோடிக்கு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.

நேபாள பிரதமர் ஷர்மா ஒலி வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், ‘பிறந்த நாளான இந்த புனித நாளில் பிரதமர் நரேந்திர மோடிக்கு அன்பான வாழ்த்துக்கள். தாங்கள் நல்ல ஆரோக்கியத்துடனும், மகிழ்ச்சியுடனும் வாழ வாழ்த்துகிறேன். நமது இரு நாடுகளுக்கும் இடையிலான உறவை மேலும் வலுப்படுத்த நாம் தொடர்ந்து நெருக்கமாக பணியாற்றுவோம்’ என்று கூறி உள்ளார்.

மோடியின் பிறந்தநாளை முன்னிட்டு பாஜக சார்பில் நாடு முழுவதிலும் சேவை வாரம் கொண்டாடப்படுகிறது. செப்டம்பர் 14 தொடங்கிய இந்த சேவை வாரம் 20 ம் தேதி வரை நடைபெறுகிறது. கட்சி தொண்டர்கள் சார்பில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன.

சேவை வார விழாவை முன்னிட்டு ரத்ததான முகாம்கள், மருத்துவ முகாம்கள், நலத்திட்ட உதவிகள் வழங்குதல், கோவில்களில் சிறப்பு வழிபாடுகள் போன்ற பணிகளில் பாஜக தொண்டர்கள் ஈடுபட்டுள்ளனர்.