X

பிரதமர் மோடிக்கு இன்று 69வது பிறந்தநாள்!

பிரதமர் மோடி இன்று தனது 69-வது பிறந்த நாளை கொண்டாடுகிறார். பிறந்த தினமான இன்று வழக்கம் போல், சொந்த மாநிலமான குஜராத் சென்று, தனது தாயார் ஹீராபென் மோடியை சந்தித்து ஆசி பெறும் பிரதமர், தொடர்ந்து அங்கு பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளவுள்ளார். பிரதமர் மோடியின் பிறந்த நாளை, கடந்த 14 ஆம் தேதி முதல் சேவை வாரமாக கொண்டாடி வருகின்றனர்.

பிறந்த நாளை முன்னிட்டு பாஜகவின் மூத்த தலைவர்களும் பிரதமர் மோடிக்கு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர். சமூக வலைத்தளங்கள் வாயிலாக பிரதமர் மோடிக்கு மக்களும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

உள்துறை மந்திரி அமித் ஷா வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், “உங்கள் தலைமையின் கீழ், வளர்ந்து வரும் இந்தியா ஒரு வலுவான, பாதுகாப்பான மற்றும் நம்பகமான நாடு என்ற அடையாளத்தை உருவாக்கியுள்ளது” என தெரிவித்துள்ளார்.

மத்திய ரயில்வே மந்திரி பியூஸ் கோயல் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், “பிரதமர் மோடியின் பிறந்த நாளுக்கு வாழ்த்து தெரிவிக்கும் 130 கோடி இந்திய குடிமக்களுடன் நானும் இணைந்து கொள்கிறேன். பிரதமர் மோடி மிகச்சிறந்த நிர்வாகி, வலுவான தலைவர், அனைவருக்கும் ஊக்கமளிக்கும் தலைவராக திகழ்கிறார்.

புதிய இந்தியாவை கட்டமைக்கும் அவரது நோக்கத்தை நிறைவேற்றுவதில் நாங்கள் அர்ப்பணிப்புடன் உள்ளோம். நல்ல ஆயுளுடன் நீண்ட நாள் வாழ நான் இறைவனிடம் பிரார்த்திக்கிறேன். இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் மோடி” இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

இதேபோல், பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங், மத்திய அமைச்சர் சுரேஷ் பிரபு, ஜல்சக்தி துறை அமைச்சர் கஜேந்திர சிங் உள்பட பாஜக தலைவர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

‘பிரதமரின் தொலைநோக்குத் தலைமை, இந்தியாவின் புதிய உச்சத்தை எட்டுவதற்கு உதவியுள்ளது. அவர் நல்ல ஆரோக்கியத்துடன் நீண்ட ஆயுளுடன் வாழ பிரார்த்தனை செய்கிறோம்’ என பாதுகாப்புத்துறை சார்பில் டுவிட்டரில் வாழ்த்து தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமூக வலைத்தளங்களிலும் பிரதமர் மோடிக்கு வாழ்த்துக்களை பதிவு செய்த வண்ணம் உள்ளனர்.

Tags: south news