மராத்தா சமுதாயத்தினருக்கு கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் இடஒதுக்கீடு வழங்கும் சட்டத்தை கடந்த பா.ஜனதா அரசு நிறைவேற்றியது. இதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை விசாரித்த சுப்ரீம் கோர்ட் மராத்தா சமுதாயத்தினருக்கு இடஒதுக்கீடு வழங்கும் சட்டத்தை ரத்து செய்தது.
இதனால், மராத்தா சமுதாயத்தினருக்கு இடஒதுக்கீடு வழங்க வலியுறுத்தி போராட்டம் நடத்த உள்ளதாக மராத்தா அமைப்பும், பா.ஜனதாவும் அறிவித்து உள்ளன. மேலும், டவ்தே புயலாலும் மகாராஷ்டிர மாநிலம் பாதிப்புகளை சந்தித்துள்ளது.
இந்நிலையில், பிரதமர் மோடியை மகாராஷ்டிர முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே டெல்லியில் இன்று சந்தித்து பேசினார். டெல்லியில் பிரதமரின் அதிகாரப்பூர்வ குடியிருப்பில் இந்த சந்திப்பு நடைபெற்றது.
பிரதமர் நரேந்திர மோடியுடனான இந்த சந்திப்பில் மராத்தா இடஒதுக்கீடு பிரச்சினை, ஓ.பி.சி. இட ஒதுக்கீடு, டவ்தே புயலால் பாதிக்கப்பட்ட மகாராஷ்டிரத்திற்கு நிவாரணம் வழங்குவது, ஜி.எஸ்.டி. நிலுவைத்தொகை உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து மகாராஷ்டிர முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே ஆலோசனை நடத்தினார்.
பிரதமர் மோடியுடனான இந்த சந்திப்பில் முதல்-மந்திரி உத்தவ் தக்கரேவுடன் துணை முதல்-மந்திரி அஜித் பவார் மற்றும் பொதுப்பணித்துறை மந்திரி அசோக் சவான் ஆகியோர் பங்கேற்றுள்ளனர்.