பிரதமர் மீது களங்கம் ஏற்படுத்திய காங்கிரஸ் மன்னிப்பு கேட்க வேண்டும் – ராஜ்நாத் சிங் வலியுறுத்தல்

‘ரபேல்’ போர் விமானங்கள் வாங்க முடிவு எடுத்ததை சந்தேகப்பட எதுவும் இல்லை என்று கடந்த ஆண்டு டிசம்பர் 18-ந் தேதி சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு அளித்தது. அதை மறுஆய்வு செய்யக்கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை சுப்ரீம் கோர்ட்டு நேற்று தள்ளுபடி செய்தது.

இந்த தீர்ப்பு குறித்து ராணுவ மந்திரி ராஜ்நாத் சிங் கருத்து தெரிவித்துள்ளார். அருணாசலபிரதேச மாநிலம் தவாங்கில் நேற்று நடைபெற்ற ராணுவ-பொதுமக்கள் நட்புறவு நிகழ்ச்சியில் அவர் பங்கேற்றார். பிறகு அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

ரபேல் போர் விமான கொள்முதல் பணி, முற்றிலும் வெளிப்படையாக நடைபெற்றது. ராணுவத்தின் தயார்நிலையை மேம்படுத்தும் அவசரநிலையை கருத்திற்கொண்டு வாங்கப்பட்டது. தேசத்தின் பாதுகாப்பு சம்பந்தப்பட்ட இந்த பிரச்சினையை அரசியல் ஆக்கக்கூடாது.

எனவே, மறுஆய்வு மனுவை சுப்ரீம் கோர்ட்டு நிராகரித்ததை நான் முழுமனதுடன் வரவேற்கிறேன். இது அரசின் நிலைப்பாட்டை உறுதி செய்துள்ளது.

ஆனால், ரபேல் விவகாரத்தில் ஊழல் நடந்துள்ளதாக காங்கிரஸ் போன்ற அரசியல் கட்சிகள் குற்றம் சாட்டியது மிகவும் துரதிருஷ்டவசமானது. தீய உள்நோக்கம் கொண்டது. எனவேதான், கடுமையான குற்றச்சாட்டுகளை கூறும்போது கவனமாக இருக்க வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டு கூறியுள்ளது. தூய்மையான, நேர்மையான பிரதமர் மோடியின் நற்பெயரை களங்கப்படுத்தும் நோக்கத்திலேயே ஊழல் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது. இந்த அவதூறு பிரசாரத்துக்காக காங்கிரஸ் கட்சியை மக்கள் மன்னிக்க மாட்டார்கள். மக்களை தவறாக திசைதிருப்பியதற்காக, காங்கிரஸ் கட்சி மன்னிப்பு கேட்க வேண்டும்.

இவ்வாறு ராஜ்நாத் சிங் கூறினார்.

பா.ஜனதா செயல் தலைவர் ஜே.பி.நட்டா கூறியதாவது:-

சாலையில் இருந்து நாடாளுமன்றம்வரை, ராகுல் காந்தியும், அவரது கட்சியும் ரபேல் விவகாரத்தில் நாட்டை தவறாக திசைதிருப்ப முயன்றனர். ஆனால் உண்மை வென்றுள்ளது. ஆகவே, ராகுல் காந்தி, நாட்டு மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.

“சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு, மோடி அரசுக்கு பெரும் வெற்றி” என்று பா.ஜனதா நிர்வாகிகள் சந்தோஷ், ஷாநவாஸ் உசேன் ஆகியோர் கூறியுள்ளனர்.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools