Tamilசெய்திகள்

பிரதமர் பயணத்தில் ஏற்பட்ட பாதுகாப்பு குளறுபடி தொடர்பான வழக்கு – விசாரணையை நிறுத்துமாறும் உச்ச நீதிமன்றம் கேட்டுக்கொண்டது

பிரதமர் மோடியின் பஞ்சாப் பயணத்தில் ஏற்பட்ட பாதுகாப்பு குளறுபடிகள் தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் இன்று நடைபெற்றது.

அப்போது பேசிய மத்திய அரசின் தலைமை வழக்கறிஞர் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, பிரதமர் பாதுகாப்பு குளறுபடி விசாரணையை யாரிடமும் விட்டுவிட முடியாது என்றும், இது எல்லை தாண்டிய பயங்கரவாத விவகாரம் என்றும், தெரிவித்தார். எனவே தேசிய புலனாய்வு நிறுவனம் இந்த விசாரணைக்கு உதவலாம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

பிரதமரின் பாதுகாப்பு வாகனம் நின்று கொண்டிருந்த மேம்பாலத்தில் ஒரு குதிரைப்படை இருந்தது. அங்கு ஒரு கும்பலால் கூச்சல் குழப்பம் ஏற்பட்டது என தெரிவித்தார். போராட்டக்காரர்கள் மேம்பாலத்தின் பின்புறம் கூடியிருந்தால் என்ன நடந்திருக்கும் என்பது கற்பனை செய்து பார்க்க வேண்டும் என அவர் குறிப்பிட்டார்.

இதையடுத்து பிரதமரின் பயணப் பதிவுகள் குறித்த விபரங்களை பாதுகாக்க பஞ்சாப் மற்றும் ஹரியானா உயர் நீதிமன்றப் பதிவாளர் ஜெனரலுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.  பஞ்சாப்  காவல்துறை அதிகாரிகள், பிற மத்திய மற்றும் மாநில விசாரணை அமைப்புகள்  தங்களது முழுப்பதிவையும் சீல் வைத்து ஒத்துழைக்கவும் தேவையான உதவிகளை வழங்கவும் உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தி உள்ளது.

மேலும் திங்கள்கிழமை வரை விசாரணையை நிறுத்துமாறு மத்திய மற்றும் பஞ்சாப் விசாரணைக் குழுக்களை உச்சநீதிமன்றம் கேட்டுக் கொண்டுள்ளது .  இந்த வழக்கின் அடுத்தகட்ட  விசாரணையை திங்கட்கிழமைக்கு ஒத்தி வைத்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.