மதுரை மாவட்டத்தில் செயல்படுத்தப்பட்டு வரும் மத்திய அரசின் மக்கள் நலத் திட்டங்கள் குறித்து மத்திய வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்களுக்கான இணை மந்திரி கவுசல் கிஷோர் இன்று ஆய்வு மேற்கொண்டார். இந்த கூட்டத்தில் மதுரை மாவட்ட ஆட்சியர் அனீஷ்சேகர் , மாநகராட்சி ஆணையாளர் சிம்ரன் ஜித் சிங் மற்றும் துறை சார்ந்த உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
அப்போது திட்டப் பயனாளிகள் விவரங்கள், திட்டங்களை செயல்படுத்த ஒதுக்கப்ட்டுள்ள நிதி, நடைபெற்று வரும் திட்ட பணிகள் ஆகியவை குறித்து அவர் விரிவாக கேட்டறிந்தார். மேலும் திட்ட பயனாளிகளை நேரில் சந்தித்து கலந்துரையாடிய அவர், அவர்களது வாழ்வாதாரம், தொழில் வளர்ச்சி, பொருளாதார முன்னேற்றம் ஆகியவை குறித்தும் விசாரித்தார்.
தொடர்ந்து கூட்டத்தில் பேசிய மத்திய மந்திரி கவுசல் கிஷோர், பிரதமரின் வீடு வழங்கும் திட்டம் மற்றும் நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு திட்டத்தின் கீழ் வீடுகள் திட்டத்தில் சாலையோர வியாபாரிகள் அடித்தட்டு மக்களை இணைக்க தேவையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.