பிரதமரின் மக்கள் நிதித்திட்ட அணுகுமுறையை நாடு ஏற்றுக்கொண்டது – அமைச்சர் நிர்மலா சீதாராமன்
பிரதமரின் மக்கள் நிதித்தி்ட்டத்தை கடந்த 2014ம் ஆண்டு ஆகஸ்ட் 15ந் தேதி தமது சுதந்திர தின உரையில், பிரதமர் மோடி அறிவித்தார். இந்த திட்டத்தின் 8வது ஆண்டு தினத்தையொட்டி மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் வெளியிட்டுள்ள செய்தியில் கூறியிருப்பதாவது:
அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சியை நோக்கிய பெரும் முன்னெடுப்பு அனைவரையும் உள்ளடக்கிய பொருளாதாரமாகும். இது சமூகத்தின் விளிம்பு நிலை பிரிவினரின் ஒட்டுமொத்த பொருளாதார மேம்பாட்டை உறுதி செய்கிறது. 2014 ஆகஸ்ட் 28க்கு பின் பிரதமரின் மக்கள் நிதித்திட்ட கணக்கு வைத்திருப்போரில் 56 சதவீதம் பேர் பெண்கள், 67 சதவீத கணக்குகள் ஊரக மற்றும் சிறு நகரங்களில் உள்ளன. ரூ.1.74 லட்சம் கோடி வைப்புத் தொகை இருப்புடன் 46 கோடிக்கும் அதிகமான வங்கி கணக்குகள் தொடங்கப்பட்டிருக்கின்றன.
இதுவரை வங்கிக் கணக்கு இல்லாதவர்களுக்கு வங்கிக் கணக்கு தொடங்குதல், பாதுகாப்பற்ற நிலையில் இருந்தவர்களை பாதுகாத்தல், நிதியுதவி கிடைக்கப் பெறாதவர்களுக்கு நிதியுதவி கிடைக்கச் செய்தல் போன்றவை திட்டத்தின் முக்கிய அம்சங்கள். இதன் மூலம் இதுவரை வங்கி சேவை கிடைக்காத பகுதிகளில் வங்கி சேவை வழங்குவதற்கும் வகை செய்துள்ளது.
மக்கள் நிதித் திட்ட கணக்குதாரர்களின் ஒப்புதலுடன் ஆதார் மற்றும் செல்போன் எண்ணை வங்கிக் கணக்குடன் இணைப்பதன் வாயிலாக, தகுதியுள்ள பயனாளிகளுக்கு பல்வேறு அரசு நலத்திட்டங்களில் நேரடி பணப்பரிமாற்றத்திற்கு வகை செய்துள்ளது.
பிரதமரின் கிசான் திட்டத்தின்கீழ், விவசாயிகளுக்கு நேரடி வருவாய், பிரதமரின் ஏழைகள் நலவாழ்வு திட்டத்தின்கீழ் பெண்களுக்கு குறிப்பிட்ட காலத்திற்கு ஊக்கத் தொகை பரிமாற்றம் உள்ளடக்கிய நிதி சூழல் உருவாக்கப்பட்ட கட்டமைப்பின் பலன், கொரோனா பெருந்தொற்று காலத்தில் தெரிந்தது. பிரதமரின் மக்கள் நிதித்திட்ட அணுகு முறையை நாடு ஏற்றுக் கொண்டுள்ளது.
இந்த திட்டத்தை மாபெரும் வெற்றியடையச் செய்ய அயராது முயற்சிகளை மேற்கொண்ட கள அலுவலர்கள் அனைவருக்கும் நான் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.