Tamilசெய்திகள்

பிரதமரின் பஞ்சாப் பயணத்தில் நடந்த பாதுகாப்பு குறைபாடு திட்டமிட்ட சதி! – மத்திய அமைச்சர் கருத்து

பஞ்சாப் மாநிலம் பெராஸ்பூரில் நலத்திட்டங்களை தொடங்கி வைக்கும் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பங்கேற்க இருந்தார்.

இதற்காக நேற்று காலை பஞ்சாப் சென்ற பிரதமர் மோடி, நிகழ்ச்சி நடைபெறும் இடத்திற்கு ஹெலிகாப்டர் வாயிலாக செல்ல இருந்தார்.

ஆனால், மோசமான வானிலை காரணமாக மோடியின் ஹெலிகாப்டர் பயணம் ரத்து செய்யப்பட்டு சாலை மார்க்கமாக செல்ல திட்டமிடப்பட்டது.  ஆனால்,போராட்டம் காரணமாக சாலை மறிக்கப்பட்டிருந்ததால் பதிண்டா என்ற இடத்தில் மேம்பாலத்தில் பிரதமர் மோடியின் பாதுகாப்பு வாகனம்  அப்படியே நின்றது. பிரதமரின் பாதுகாப்பு ஏற்பாட்டில் ஏற்பட்ட மிகப்பெரிய குளறுபடியை அடுத்து மோடி பங்கேற்க இருந்த நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டது.

உடனடியாக பதிண்டா விமான நிலையத்திற்கு திரும்பிய பிரதமர் மோடி, புதுடெல்லி திரும்பிச் சென்றார். பஞ்சாப்பில் பிரதமர் மோடியின் நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இது ஒரு சதி என்று  மத்திய மந்திரியும் பஞ்சாப் பாஜக பொறுப்பாளருமான கஜேந்திர சிங் ஷெகாவத் தெரிவித்துள்ளார்.  இதற்கு காரணமானவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்பதை பஞ்சாப் மாநில அரசு உறுதி செய்ய வேண்டும். சில அதிகாரிகளை சஸ்பெண்ட் செய்யும் முயற்சியால் மட்டும் பிரச்சினைக்கு தீர்வு கிடைக்காது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில், பிரதமர் மோடியின் பஞ்சாப் பயணத்தின் போது தீவிரமான பாதுகாப்பு குறைபாடு  ஏற்பட்டது குறித்து  மத்திய உள்துறை அமைச்சகம், பஞ்சாப்  மாநில அரசிடம் இருந்து விரிவான அறிக்கையை கோரியுள்ளது.  அதற்கு காரணமானவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கவும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

இதற்கிடையில், பிரதமர் மோடி பாதுகாப்பில் ஏற்பட்டுள்ள குறைபாட்டிற்கு  பா.ஜ.க.தேசிய தலைவர் ஜே.பி.நட்டா கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
பஞ்சாபில் உள்ள காங்கிரஸ் அரசு, மாநிலத்தில் பிரதமர் மோடியின் திட்டத்தை சிதைக்க அனைத்து தந்திரங்களையும் செய்ய முயற்சிப்பதாக தமது ட்விட்டர் பக்கத்தில் அவர் குற்றம் சாட்டி உள்ளார்.