X

பிரஜ்வல் ரேவண்ணாவை இந்தியா அழைத்து வர நடவடிக்கை எடுக்க வேண்டும் – பிரதமர் மோடிக்கு சித்தராமையா கடிதம்

முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் பேரனும், கர்நாடகாவின் ஹசன் தொகுதி எம்.பி.யுமான பிரஜ்வல் ரேவண்ணா ஆபாச வீடியோ வழக்கில் சிக்கியுள்ளார். இந்த வழக்கை சிறப்பு விசாரணை குழு விசாரிக்கிறது. மத்திய அரசின் உதவியுடன் பிரஜ்வல் ஜெர்மன் சென்றுள்ளார் என காங்கிரஸ் குற்றம் சாட்டியுள்ளது.

இந்நிலையில், கர்நாடக முதல் மந்திரி சித்தராமையா பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார். அதில் அவர் கூறியுள்ளதாவது:

தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளரும், ஹசன் சிட்டிங் எம்.பி.யுமான பிரஜ்வல் ரேவண்ணா சம்பந்தப்பட்ட ஆபாச வீடியோக்கள் பற்றி, நீங்கள் அறிந்து இருப்பீர்கள் என்று நினைக்கிறேன். நாட்டை உலுக்கிய பயங்கரமான மற்றும் வெட்கக்கேடான வழக்கை பிரஜ்வல் எதிர்கொண்டுள்ளார்.

இந்த வழக்கை விசாரிக்க சி.ஐ.டி.யின் கீழ் சிறப்பு விசாரணை குழு அமைக்கப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட பெண்கள் அளித்த புகாரில் பிரஜ்வல் மீது கடந்த 28-ம் தேதி வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. பிரஜ்வல் ஜெர்மனியில் இருப்பதால் விசாரணை நிலுவையில் உள்ளது.

மத்திய வெளியுறவுத்துறை பிரஜ்வலின் பாஸ்போர்ட்டை ரத்து செய்வதுடன், சர்வதேச போலீஸ் உதவியுடன் ஜெர்மனியில் இருந்து அவரை அழைத்துவர நடவடிக்கை எடுக்கவேண்டும். வழக்கின் அனைத்து ஆவணங்களையும் வழங்க சிறப்பு விசாரணை குழு தயாராக உள்ளது என குறிப்பிட்டுள்ளார்.