X

பிரச்சினை இல்லாத புத்தாண்டு! – மகிழ்ச்சியில் காவல் துறை

சென்னையில் மெரினா, எலியட்ஸ் கடற்கரைகளில் புத்தாண்டு கொண்டாட்டம் களை கட்டியது. கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள தங்கும் விடுதிகள், பண்ணை வீடுகளிலும் புத்தாண்டு நிகழ்ச்சிகள் ஆடல்-பாடலுடன் நடைபெற்றது.

புத்தாண்டு கொண்டாட்டங்களை அமைதியான முறையில் நடத்தி முடிப்பதற்கு போலீசார் பாதுகாப்பு ஏற்பாடுகளை பலப்படுத்தி இருந்தனர்.

சென்னை மாநகர் முழுவதும் 15 ஆயிரம் போலீசார் நேற்று இரவு விடிய விடிய ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். மெரினாவில் பல்லாயிரக்கணக்கானோர் திரண்டு புத்தாண்டு கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.

நள்ளிரவு 12 மணிக்கு புத்தாண்டு பிறந்ததும் ‘ஹேப்பி நியூ இயர்’ என்று உற்சாகம் பொங்க கோ‌ஷம் எழுப்பிய இளைஞர்கள், புத்தாண்டு வாழ்த்துக்களை சொல்லி மகிழ்ந்தனர்.

மெரினா கடற்கரையில் புத்தாண்டு கொண்டாட்டத்துக்கு எந்தவித இடையூறும் ஏற்படக்கூடாது என்பதை கருத்தில் கொண்டு நேற்று இரவு 8 மணியில் இருந்து போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டிருந்தது. இதனால் மெரினாவில் நேற்று இரவு மக்கள் கூட்டம் அலைமோதியது.

புத்தாண்டு கொண்டாட்டத்தின்போது நட்சத்திர ஓட்டல்களுக்கு போலீசார் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து இருந்தனர்.

பார்களில் போதுமான வசதிகளை செய்யவும் அறிவுறுத்தப்பட்டிருந்தது. அதே நேரத்தில் பொது இடங்களில் புத்தாண்டு கொண்டாட்டத்தில் ஈடுபடுவோரை போலீசாரும் தீவிரமாக கண்காணித்தனர். இதனால் பெரிய அளவில் அசம்பாவித சம்பவங்கள் நடைபெறவில்லை.

அமைதியான முறையில் புத்தாண்டு கொண்டாட்டங்கள் நடந்து முடிந்தன. கடந்த ஆண்டு சில இடங்களில் வன்முறை சம்பவங்கள் அரங்கேறி இருந்தன. இந்த ஆண்டு அதுபோன்று எதுவும் நடைபெறவில்லை.

புத்தாண்டு கொண்டாட்டம் என்றாலே, மோட்டார் சைக்கிளில் மின்னல் வேகத்தில் பயணம் செய்ய வேண்டும் என்கிற பழக்கம் இளைஞர்கள் மத்தியில் பரவியுள்ளது.

இதனால் ஒவ்வொரு ஆண்டும் புத்தாண்டு கொண்டாட்டத்தில் இளைஞர்கள் தாறுமாறாக மோட்டார் சைக்கிளில் செல்வது வழக்கம்.

இந்த ஆண்டும் புத்தாண்டு கொண்டாட்டத்தில் அதுபோன்று இளைஞர்கள் சாகசத்தில் ஈடுபட்டனர்.

Tags: south news