கேரளாவின் வட எல்லையில் உள்ள காசர்கோட்டை சேர்ந்த தம்பதி சானியா-மித்தா. இவர்களுக்கு கடந்த 15 நாட்களுக்கு முன்பு காசர்கோட்டில் உள்ள அரசு ஆஸ்பத்திரியில் குழந்தை பிறந்தது. அந்த குழந்தையை பரிசோதித்த டாக்டர்கள், குழந்தைக்கு இதய கோளாறு இருப்பதை கண்டுபிடித்தனர்.
நேற்று குழந்தையின் உடல்நிலை மோசமானது. மேல் சிகிச்சை செய்தால் மட்டுமே குழந்தையை காப்பாற்ற முடியும் என்ற நிலை ஏற்பட்டது. இதுபற்றி டாக்டர்கள், குழந்தையின் பெற்றோருக்கு தகவல் தெரிவித்தனர்.
குழந்தையை உடனடியாக திருவனந்தபுரத்தில் உள்ள குழந்தைகளுக்கு சிறப்பு சிகிச்சை அளிக்கும் ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லும்படி குழந்தையின் பெற்றோரிடம் டாக்டர்கள் கூறினர்.
மேலும் இந்த தகவல் கேரள அரசின் குழந்தைகள் நல அலுவலகத்திற்கும் தெரிவிக்கப்பட்டது. குழந்தைகள் நல அலுவலர்கள் இதனை கேரள சுகாதாரத்துறை மந்திரி கே.கே. சைலஜா கவனத்திற்கு கொண்டு சென்றனர்.
குழந்தையின் உடல்நிலை குறித்து அறிந்த மந்திரி, குழந்தையை காப்பாற்ற உடனடி நடவடிக்கை எடுக்கும்படி அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார். மேலும் குழந்தையை உடனடியாக திருவனந்தபுரம் ஆஸ்பத்திரிக்கு ஆம்புலன்சில் கொண்டு வரவும் ஏற்பாடு செய்தார்.
காசர்கோட்டில் இருந்து திருவனந்தபுரத்திற்கு மின்னல் வேகத்தில் வந்தாலும் கூட 10 முதல் 12 மணி நேரம் ஆகும். அதுவரை குழந்தையின் உயிரை பாதுகாப்பது கடினம் என டாக்டர்கள் தெரிவித்தனர்.
இதையடுத்து கொச்சியில் உள்ள அமிர்தா ஆஸ்பத்திரியில் குழந்தையை சேர்த்து சிகிச்சை அளிக்க மந்திரி சைலஜா ஏற்பாடு செய்தார். குழந்தைக்கு கேரள அரசின் இதயம் காப்போம் திட்டத்தின் கீழ் சிகிச்சை அளிக்கவும் உத்தரவிட்டார்.
காசர்கோட்டில் இருந்து கொச்சி 400 கி.மீ. தூரத்தில் உள்ளது. இந்த சாலை எப்போதும் வாகன நெருக்கடி மிகுந்த சாலை. இதில் ஆம்புலன்சில் வந்தாலும் கூட குறிப்பிட்ட நேரத்திற்குள் ஆஸ்பத்திரிக்கு சென்று குழந்தையின் உயிரை காப்பாற்ற முடியுமா? என்ற கேள்வி குழந்தைகள் நல அதிகாரிகளுக்கு ஏற்பட்டது.
குழந்தையை காப்பாற்றவும், குழந்தையை ஏற்றிச் செல்லும் ஆம்புலன்சிற்கு வழி விடவும் சமூக ஊடகங்கள் மூலம் குழந்தைகள் நல அதிகாரிகளும், மந்திரி சைலஜாவும் வேண்டுகோள் விடுத்தனர்.
இந்த செய்தி சமூக ஊடகங்கள் வழியாக வைரலாக பரவியது. காசர்கோட்டில் குழந்தையுடன் புறப்பட்ட ஆம்புலன்சிற்கு தேசிய நெடுஞ்சாலைகளில் கூட மக்கள் வழிவிட்டு ஒதுங்கி நின்றனர். முக்கிய சந்திப்புகளில் போக்குவரத்து போலீசார் ஆம்புலன்சு செல்ல வழி ஏற்படுத்தி கொடுத்தனர்.
பொதுமக்கள், வாகன ஓட்டிகள், போக்குவரத்து போலீசார் மற்றும் மந்திரியின் ஏற்பாட்டால் காசர்கோட்டில் இருந்து புறப்பட்ட ஆம்புலன்சு 400 கி.மீ. தூரத்தை 5½ மணி நேரத்தில் கடந்து கொச்சி அமிர்தா ஆஸ்பத்திரியை வந்தடைந்தது.
அங்கு தயார் நிலையில் இருந்த டாக்டர்கள் குழந்தைக்கு அவசர சிகிச்சை அளித்தனர். குழந்தையின் உடல்நிலை மிகவும் மோசமாக இருந்ததால் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. குழந்தைக்கு சிகிச்சை அளிக்கும் டாக்டர்கள் கூறும்போது, குழந்தையின் உடல்நிலை குறித்து 24 மணி முதல் 48 மணி நேரம் கழித்தே எதுவும் கூற முடியும். நாங்கள் குழந்தையின் உயிரை காப்பாற்ற போராடி வருகிறோம் என்றனர்.
கேரள மந்திரியின் ஏற்பாட்டில் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட குழந்தை நலமுடன் திரும்ப வேண்டும் என்பதே கேரள மக்களின் விருப்பம். கேரளாவில் பாராளுமன்ற தேர்தல் பிரசாரம் உச்சக்கட்டத்தில் இருந்த நிலையில் குழந்தையை காப்பாற்ற கேரள மக்கள் எடுத்த மனித நேய முயற்சி எல்லோரையும் வியப்பில் ஆழ்த்தியது.