பியர் கிரில்சுடன் காட்டுக்குள் பயணித்த பிரதமர் மோடி

பிரபல தொலைக்காட்சி சேனலான டிஸ்கவரியில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிதான் மேன் vs வைல்ட். இந்த பிரபலமான நிகழ்ச்சியில் இந்திய பிரதமர் மோடி கலந்துக் கொண்டு காட்டுக்குள் பியர் கிரில்சுடன் பயணித்துள்ளார்.

இது குறித்து பியர் கிரில்ஸ் தனது டுவிட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார். இதில், ‘180 நாடுகளை சேர்ந்த மக்களுக்கு பிரதமர் மோடி குறித்து தெரியப்போகிறது.

விலங்குகளின் பாதுகாப்பு மற்றும் சுற்றுச்சூழல் மாற்றம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த வனப்பகுதிக்கு சென்றுள்ளார். இந்த நிகழ்ச்சி வரும் ஆகஸ்ட் மாதம் 12ம் தேதி இரவு 9 மணிக்கு டிஸ்கவரி சேனலில் ஒளிபரப்பப்படும்’ என பதிவிட்டிருந்தார்.

இதற்கு பதிலளித்த பிரதமர் மோடி தனது டுவிட்டர் பக்கத்தில் பியர் வெளியிட்ட வீடியோவை தன் பக்கத்தில் பகிர்ந்து, ‘இந்தியாவில் பசுமையான காடுகள், அரிய வகை உயிரினங்கள், மற்றும் நீர் நிலைகள் உள்ளன.

இந்த நிகழ்ச்சியை பார்த்தால் நேரில் பார்க்க வேண்டும் என்கிற ஆசை வரும். அதோடு சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்தும் தெரிய வரும். இந்தியா வந்து இந்த நிகழ்ச்சியை எடுத்ததற்காக பியர் கிரில்சுக்கு நன்றி’ என குறிப்பிட்டுள்ளார்.

இதற்கு பதிலளித்த பியர் கிரில்ஸ், ‘உங்களுடன் இந்த நிகழ்ச்சியில் பயணித்தது பெருமையாக இருந்தது. நமது முக்கிய நோக்கமான சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் பூமியின் பாதுகாப்பு உலகமெங்கும் பரவட்டும்’ என பிரதமர் மோடியை பாராட்டி பதிவிட்டுள்ளார்.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools