பிப்ரவரி மாதம் மெகா ஐபிஎல் ஏலம் – பிசிசிஐ அறிவிப்பு

அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலம் வரும் பிப்ரவரி 7 மற்றும் 8 ஆகிய தேதிகளில் நடத்த திட்டமிட்டிருப்பதாக பிசிசிஐ-யின் மூத்த அதிகாரி ஒருவர் தகவல் தெரிவித்துள்ளார். மொத்தம் 10 அணிகள் பங்குபெறும் இந்த ஏலத்தை பெங்களூருவில் நடத்துவதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருவதாகவும் அவர் கூறியுள்ளார்.

2022-ம் ஆண்டு ஐபிஎல் தொடரில் வழக்கமாக பங்கேற்கும் எட்டு அணிகளுடன், இரண்டு புதிய அணிகள் இடம்பெறுகின்றன. இதற்காக ஏற்கனவே உள்ள அணிகள், அதிகபட்சமாக 4 வீரர்களை மட்டும் தக்கவைத்துக்கொண்டு மற்ற வீரர்களை விடுவித்துள்ளன. இரண்டு புதிய அணிகளும் ஏலத்திற்கு முன்பாகவே 3 வீரர்களை தேர்ந்தெடுத்துக்கொள்ளலாம் என பிசிசிஐ தெரிவித்துள்ளது.

இருப்பினும் மெகா ஏலம் குறித்து பெரும்பாலான அணி உரிமையாளர்கள் அதிருப்தியை தெரிவித்துள்ளனர். ஒரு அணியில் இடம்பெற்றுள்ள வீரர்கள் ஒருவருக்கொருவர் புரிந்துகொண்டு ஒன்றாக இணைந்து விளையாடவே சில ஆண்டுகள் ஆகும். மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை அணி முழுவதையும் கலைத்து மெகா ஏலம் நடத்துவது அணிகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என தெரிவித்துள்ளனர்.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools