முதலமைச்சர் எடியூரப்பா உப்பள்ளி விமான நிலையத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-
கர்நாடகத்தில் நிலையான ஆட்சியை ஏற்படுத்த நாங்கள் அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டுள்ளோம். வருகிற பிப்ரவரி மாதம் கர்நாடக பட்ஜெட்டை தாக்கல் செய்ய உள்ளேன். இதில் விவசாயிகளின் மேம்பாட்டிற்கான புதிய திட்டங்கள் இடம் பெறும். காங்கிரஸ் மற்றும் ஜனதா தளம்(எஸ்) கட்சியினர், நாங்கள் ஒற்றுமையாக உள்ளோம் என்று கூறிக்கொள்கிறார்கள். ஆனால் இடைத்தேர்தல் நடைபெறும் 15 தொகுதிகளிலும் அத்தகைய நிலை தென்படவில்லை.
எங்கு பார்த்தாலும் பா.ஜனதாவுக்கு ஆதரவு இருப்பது தெரிகிறது. பா.ஜனதாவுக்கு ஆதரவான அலை வீசுவதால், 15 தொகுதிகளிலும் நாங்கள் வெற்றி பெறுவது உறுதி. மாநிலங்களவை இடைத்தேர்தலில் பா.ஜனதாவுக்கு எதிராக காங்கிரஸ் மற்றும் ஜனதா தளம்(எஸ்) கட்சிகளால் ஒரு வேட்பாளரை கூட நிறுத்த முடியவில்லை.
இதன் மூலம் அக்கட்சியினர் தோல்வியை ஒப்புக்கொண்டனர் என்பது தெளிவாக தெரிகிறது. வருகிற 9-ந் தேதிக்கு பிறகு எடியூரப்பா ராஜினாமா செய்வார் என்று காங்கிரசார் சொல்கிறார்கள். இடைத்தேர்தல் முடிவு என்னாகிறது என்பதை நீங்கள் பார்க்கத்தான் போகிறீர்கள். அதுவரை எதிர்க்கட்சியினர் அமைதியாக இருப்பது நல்லது.
இவ்வாறு எடியூரப்பா கூறினார்.