பிச்சை எடுப்பதை தடுக்க முடியாது – உச்ச நீதிமன்ற நீதிபதிகள்
டெல்லியை சேர்ந்த குஷ்கர்லா என்பவர் சுப்ரீம் கோர்ட்டில் ஒரு வழக்கு தொடர்ந்து இருந்தார்.
டெல்லி நகரில் உள்ள சிக்னல்களில் பிச்சை எடுப்பவர்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. இப்போது கொரோனா காலத்தில் இந்த பிச்சைக்காரர்களால் மற்றவர்களுக்கு கொரோனா நோய் பரவும் நிலை உருவாகி உள்ளது. எனவே நகரில் பிச்சை எடுப்பதற்கு தடை விதிக்க வேண்டும் என்று கூறி இருந்தார்.
இந்த வழக்கு இன்று நீதிபதிகள் சந்திரசூட், எம்.ஆர்.ஷா ஆகியோர் அடங்கிய பெஞ்சு முன்பு விசாரணைக்கு வந்தது. இதை விசாரித்த நீதிபதிகள், பிச்சை எடுப்பதை தடை செய்ய முடியாது என்று கூறினார்கள்.
மனுதாரர் தெருக்களில் பிச்சை எடுப்பவர்களை தடுக்க வேண்டும் என்று கூறி இருக்கிறார். அவர்கள் ஏன் பிச்சை எடுப்பதற்காக தெருக்களுக்கு வருகிறார்கள்? வறுமை வாட்டும்போது அவர்கள் தெரு வீதிக்கு வர வேண்டிய நிலைமை ஏற்படுகிறது.
சுப்ரீம் கோர்ட்டால் அவர்களை தடுப்பதற்கு உத்தரவு போட முடியாது. அதற்கான வாய்ப்புகள் இல்லை. இது ஒரு சமூக பிரச்சினை. அரசு சமூக நல கொள்கைகளை வகுத்து இதற்கு தீர்வு காண வேண்டும்.
அவர்கள் நம் கண்ணில் படக்கூடாது என்று எங்களால் எந்த உத்தரவும் போட முடியாது. பிச்சைக்காரர்களுக்கு மறு வாழ்வு அளிக்கக்கூடிய திட்டங்களை அவர்களின் நிலைமையை கருத்தில் கொண்டு உருவாக்க வேண்டும்.
எந்த சூழ்நிலையில் அவர்கள் பிச்சை எடுக்க வருகிறார்கள்? என்பதை கண்டுபிடிக்க வேண்டும். இது சமூக பொருளாதார பிரச்சினை. அவர்களுக்கு தடை விதிப்பதன் மூலம் இதை சரி செய்துவிட முடியாது. இது சம்பந்தமாக மத்திய அரசு, டெல்லி நகர அரசு ஆகியவை விளக்கம் அளிக்க நோட்டீஸ் அனுப்ப உத்தரவிடுகிறோம்.
இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.
அப்போது மனுதாரர் தரப்பில் ஆஜரான வக்கீல் சின்மாய் ஷர்மா கூறும்போது, ‘‘எங்கள் தரப்பு மனுதாரர் பிச்சைக்காரர்களுக்கு மறுவாழ்வு கிடைக்க வேண்டும் என்ற உயர்ந்த நோக்கத்தில்தான் இந்த மனுவை தாக்கல் செய்துள்ளார்’’ என்று கூறினார்.
இந்த வழக்கை 2 வாரத்திற்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.