சர்வதேச அளவிலான டெஸ்ட், ஒருநாள், மற்றும் டி20 கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்கும் இந்திய அணியில் இடம் பெறும் வீரர்களுக்கான ஒப்பந்தத்தை, கிரேட் ஏ+, ஏ, பி, சி உள்ளிட்ட பிரிவுகளில் இந்திய கிரிக்கெட் வாரியம் வெளியிட்டு வருகிறது.
இதில், கிரேட் ஏ+ பிரிவில் இடம்பெறும் வீரர்களுக்கு ஏழு கோடி ரூபாயும், ஏ, பி மற்றும் சி பிரிவு வீரர்களுக்கு முறையே ஐந்து, மூன்று மற்றும் ஒரு கோடி ரூபாயும் ஊதியமாக வழங்கப்படுகிறது.
நடப்பு ஆண்டுக்கான வீரர்கள் ஒப்பந்த பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது. அதன்படி ரோஹித் சர்மா, விராட் கோலி மற்றும் ஜஸ்பிரித் பும்ரா ஆகியோர் ஏ+ பிரிவில் நீடிக்கின்றனர்.
ரவிச்சந்திரன் அஸ்வின், ரவீந்திர ஜடேஜா, ரிஷப் பண்ட், கே.எல். ராகுல் மற்றும் முகமது ஷமி ஆகியோர் கடந்த ஆண்டைப் போலவே இந்த ஆண்டும் ஏ பிரிவில் தங்கள் இடத்தை தக்கவைத்துக் கொண்டனர்.
கடந்த ஆண்டு ஏ பிரிவில் இருந்த இஷாந்த் சர்மா, ரஹானே, புஜாரா ஆகியோர் இந்த ஆண்டு பி பிரிவில் இடம் பெற்றுள்ளனர்.
அக்ஸர் பட்டேல் மற்றும் முகமது சிராஜ் ஆகியோர் சி பிரிவில் இருந்து பி பிரிவிற்கு முன்னேறியுள்ளனர். இது தவிர ஸ்ரேயாஸ் அயரும் பி பிரிவில் இடம் பெற்றுள்ளார்.
அதே போல் கடந்த ஆண்டு ஏ பிரிவில் இருந்த ஹர்திக் பாண்டியா இந்த ஆண்டு சி பிரிவில் இடம்பெற்றுள்ளார். கடந்த ஆண்டு பி பிரிவில் இருந்த விருத்திமான் இந்த ஆண்டு சி பிரிவில் இடம்பெற்றுள்ளார். இவர்கள் தவிர உமேஷ் யாதவ், புவனேஷ்வர் குமார் ஆகியோரும் சி பிரிவில் இடம்பெற்றுள்ளனர்.