பிசிசிஐ வீரர்களிடம் ஏற்றத்தாழ்வு பார்ப்பதில்லை – நடராஜன் விளக்கம்
இந்திய கிரிக்கெட் வீரரும், ஐபிஎல் தொடரில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்காக விளையாடி வருபவர் தமிழகத்தை சேர்ந்த நடராஜன். யார்க்கர் பந்துவீச்சில் புகழ்பெற்ற நடராஜன் தற்போது டிஎன்பிஎல் கிரிக்கெட் தொடரில் திருப்பூர் அணிக்காக விளையாடி வருகிறார்.
இந்த நிலையில், சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட கிரிக்கெட் வீரர் நடராஜன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, பிசிசிஐ தன்னை புறக்கணிக்கிறதா, கிரிக்கெட் வாரியத்தில் ஏற்றத் தாழ்வுகள் இருக்கிறதா என்பது போன்ற கேள்விகளுக்கு பதில் அளித்தார்.
அப்போது பேசிய அவர், “பிசிசிஐ-இல் எனக்கு வாய்ப்பு மறுக்கப்படவில்லை. அதனால் தான் நான் இங்கு நடராஜனாக அமர்ந்து இருக்கிறேன். காயத்தால் என்னால் சில போட்டிகளில் விளையாட முடியாமல் போனது. கிரிக்கெட்டில் அரசியல் இல்லை. நான் நல்ல முறையில் தயாராகி வருகிறேன். கடந்த ஐபிஎல்-இல் நன்றாக செயல்பட்டேன்.
பிசிசிஐ வீரர்களிடம் ஏற்றத் தாழ்வுகளை பார்ப்பதில்லை. கிரிக்கெட் வாரியம் மற்றும் சக வீரர்கள் ஒத்துழைப்பு இருந்ததால், தான் என்னால் இந்திய அணியில் இடம்பிடிக்க முடிந்தது. ஐபிஎல் போட்டிகளுக்கு பிறகு, பலரும் டிஎன்பிஎல் போட்டிகளை பார்க்கின்றனர். ஒவ்வொரு ஆண்டும் டிஎன்பிஎல் சிறப்பாக வளர்ச்சி பெற்று வருகிறது.
அதிகளவு இளம் வீரர்கள் ஒவ்வொரு முறையும் டிஎன்பிஎல்-இல் சிறப்பாக செயல்படுகின்றனர். டிஎன்பிஎல் மூலம் கிராமப்புற வீரர்களுக்கும் நல்ல வாய்ப்புகள் கிடைக்கின்றன. கஷ்டப்பட்டால் அதற்கான பலன் கண்டிப்பாக கிடைக்கும். கடின உழைப்புடன், எப்போதும் தன்னம்பிக்கையை இழக்காமல் இருக்க வேண்டும்,” என்று தெரிவித்தார்.