பிசிசிஐ-ன் புதிய தலைமை செயல் அதிகாரியாக ஹேமங் அமின் நியமனம்
இந்திய கிரிக்கெட் வாரியத்தின் (பிசிசிஐ) தலைமைச் செயல் அதிகாரியாகப் பணியாற்றிய ராகுல் ஜோரி, கடந்த டிசம்பர் மாதம் பிசிசிஐ அமைப்பில் கங்குலி தலைமையிலான புதிய நிர்வாகம் பதவியில் அமர்ந்தவுடன் தனது பொறுப்பிலிருந்து விலக முடிவெடுத்தார்.
பிறகு முடிவை மாற்றிக்கொண்டார். 2021 வரை அவருக்கு ஒப்பந்தம் உள்ளதால் அதுவரை பதவியில் இருக்கும்படி கோரிக்கை வைக்கப்பட்டதை ஏற்றுக்கொண்டார். இந்நிலையில் கடந்த வாரம் அவருடைய ராஜினாமா கடிதத்தை பிசிசிஐ ஏற்றுக்கொண்டது.
கங்குலி பிசிசிஐ தலைவராக ஆன பிறகு அவரும் செயலாளர் ஜெய் ஷாவும்தான் ஐசிசி கூட்டங்களில் பங்கேற்றார்கள். பிசிசிஐயின் முக்கியமான கூட்டங்களிலும் இவ்விருவருமே தலைமையேற்றார்கள். ஆனால், நிர்வாகக் குழுவின் (சிஓஏ) பொறுப்பில் பிசிசிஐ இருந்தபோது ராகுல் ஜோரி கூடுதலான அதிகாரம் பெற்றிருந்தார்.
பிசிசிஐ நிர்வாகப் பணிகளில் மட்டுமல்லாமல் 2017-ல் பயிற்சியாளராக இருந்த கும்ப்ளே பதவி விலகியதிலும் அவர் முக்கிய பங்கு வகித்தார். இந்நிலையில் ராகுல் ஜோரி தனது பதவியிலிருந்து விலகியதையடுத்து, பிசிசிஐ-யின் தற்காலிகத் தலைமைச் செயல் அதிகாரியாக ஹேமங் அமின் நியமிக்கப்பட்டுள்ளார். அவர் தற்போது ஐபிஎல் போட்டியின் தலைமை அதிகாரியாக உள்ளார்.