‘சரவணன் மீனாட்சி’ சீரியலில் நடித்து பிரபலமானவர் நடிகர் கவின். இதையடுத்து படங்களில் சிறிய கதாபாத்திரங்களில் நடித்து வந்த அவர், ‘நட்புன்னா என்னானு தெரியுமா’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோவாக அறிமுகமானார். அதைத்தொடர்ந்து பிக்பாஸ் நிகழ்ச்சியின் 3-வது சீசனில் கலந்து கொண்டார். இதன் பின்னர் வெளியான ‘லிஃப்ட்’, ‘டாடா’ போன்ற திரைப்படங்கள் ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்றது.
இவர் தற்போது நடன இயக்குனர் சதீஷ் இயக்குனராக அறிமுகமாகும் படத்தில் கதாநாயகனாக நடிக்கிறார். பெயரிடப்படாத இப்படத்தில் அயோத்தி பட நாயகி ப்ரீத்தி அஸ்ரானி கதாநாயகியாக நடிக்க ரோமியோ பிக்சர்ஸ் ராகுல் தயாரிக்கிறார். இப்படத்தின் மூலம் அனிருத் முதல் முறையாக கவினுடன் இணைந்துள்ளார். இப்படத்திற்கான எதிர்பார்ப்பு இப்போதே பெருமளவில் உயர்ந்துள்ளது.
இந்த நிலையில் இவரது திருமண அறிவிப்பு ரசிகர்களை ஆனந்த அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. தனியார் பள்ளியில் பணியாற்றி வரும் மோனிகா என்பவரை காதலித்து வந்தார் கவின். மிக ரகசியமான இவர்களின் காதல் தற்போது இருவீட்டார் சம்மதத்துடன் திருமணக் கட்டத்தை எட்டியுள்ளது. இவர்களின் திருமணம் அனைவரின் ஆசியுடன் ஆகஸ்ட் மாதம் 20 -ஆம் தேதி கோலாகலமாக நடைபெறவுள்ளது.