‘பிகில்’ டிரைலர் கொண்டாட்டத்திற்கு தடை விதித்த போலீஸ்!

அட்லீ இயக்கத்தில் விஜய் நடிப்பில் தயாராகி இருக்கும் படம் ‘பிகில்’. தீபாவளிக்கு வெளியாகும் இந்த படத்தின் டிரைலர் நேற்று முன் தினம் இணையத்தில் வெளியிடப்பட்டது. இந்த டிரைலருக்கு இணையத்தில் பெரும் வரவேற்பு கிடைத்தது. ஷாரூக் கான், வருண் தவான், கரண் ஜோஹர், விவேக் ஓபராய் உள்ளிட்ட பலரும் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

வழக்கமாக விஜய் படத்தின் டிரைலர் வெளியாகும் போது, தமிழகத்தில் பல்வேறு திரையரங்குகளில் ஒளிபரப்பட்டும். விஜய் ரசிகர்கள் கலந்து கொண்டு கொண்டாட்டத்தில் ஈடுபடுவார்கள். இந்த நிகழ்ச்சியில் விஜய் நடித்த பல்வேறு படங்களிலிருந்து பாடல்கள், காட்சிகள் உள்ளிட்டவை இடம்பெறும்.

கோயம்பேட்டில் உள்ள தனியார் திரையரங்கம் ஒன்று ‘பிகில்’ டிரைலருக்கும் இதே போன்ற ஒரு கொண்டாட்டத்தை ஏற்பாடு செய்திருந்தது. சனிக்கிழமை மாலை 5 மணி முதலே கொண்டாட்டம் இருக்கும் என்றும், இதற்காக பல்வேறு நிகழ்வுகள் விஜய் ரசிகர்களுக்காகக் காத்திருப்பதாகவும், இந்தக் கொண்டாட்டத்துக்கு காரில் வர வேண்டாம் என்றும், கார் பார்க்கிங் வசதி செய்யப்படவில்லை என்றும் அறிவித்தது. ஆனால் இந்த கொண்டாட்டத்துக்கு காவல்துறை அனுமதி மறுத்துள்ளது.

இது தொடர்பாக அந்த திரையரங்க ட்விட்டர் பக்கத்தில் ரேவ்நாத் சரண் பேசிய வீடியோ பதிவு ஒன்று வெளியிடப்பட்டது. அதில் “திரையரங்கத்துக்கு வந்த விஜய் ரசிகர்களுக்கு நன்றி. உங்களுடைய ஆசையை பூர்த்தி செய்ய முடியவில்லை. ரொம்ப வருத்தமாக உள்ளது.

ரொம்ப கஷ்டப்பட்டு நிறைய செலவு பண்ணினோம். 10 நாட்களாக இதற்காக நிறையத் திட்டமிட்டோம். திட்டமிட்டபடி அனைத்துமே வந்தது. கடைசி நேரத்தில் காவல்துறை அனுமதி கிடைக்கவில்லை. மதியம் சாப்பிடாமல் என்னால் முடிந்த அளவுக்கு முயற்சி செய்தேன். ஒரு பிரச்சினையும் பண்ணாமல் அமைதியாக கலைந்து சென்ற விஜய் ரசிகர்களுக்கு நன்றி. இவ்வளவு பேர் வந்து அமைதியாகச் சென்றுள்ளீர்கள். காவல்துறையும் விஜய் ரசிகர்கள் மீது லத்தி சார்ஜ் செய்யாமல் இருந்ததற்கும் நன்றி.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools