பாராளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் மிக மிக வலுவான கூட்டணியை அமைக்க வேண்டும் என்பதில் பா.ஜ.க. தலைவர்கள் தீவிரமாக உள்ளனர்.
தி.மு.க. கூட்டணிக்கு சவால் விட வேண்டும் என்றால் தங்கள் கூட்டணியில் டாக்டர் ராமதாசின் பாட்டாளி மக்கள் கட்சியும், பிரேமலதா விஜயகாந்தின் தேசிய முற்போக்கு திராவிட கழகமும் சேர வேண்டும் என்று தமிழக பா.ஜ.க. தலைவர்கள் விரும்புகிறார்கள். இதற்காக அந்த 2 கட்சிகளுடனும் பா.ஜ.க. தலைவர்கள் ரகசிய பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்கள்.
இந்த நிலையில் பா.ம.க. வையும், தே.மு.தி.க.வையும் நழுவ விட்டு விடக்கூடாது என்பதில் அ.தி.மு.க.வும் தீவிரமாக உள்ளது. அ.தி.மு.க. மூத்த தலைவர்கள் தொடர்ந்து இந்த இரு கட்சி தலைவர்களிடமும் மாறி மாறி பேசி வருகிறார்கள்.
இந்த நிலையில் பா.ம.க. வையும், தே.மு.தி.க.வையும் நழுவ விட்டு விடக்கூடாது என்பதில் அ.தி.மு.க.வும் தீவிரமாக உள்ளது. அ.தி.மு.க. மூத்த தலைவர்கள் தொடர்ந்து இந்த இரு கட்சி தலைவர்களிடமும் மாறி மாறி பேசி வருகிறார்கள்.
அ.தி.மு.க.-பா.ஜ.க. ஆகிய இரு கட்சிகளும் தங்களிடம் தொடர்ந்து பேசுவதால் பா.ம.க., தே.மு.தி.க. இரு கட்சி தலைவர்கள் தங்களது கோரிக்கைகளை தீவிரப்படுத்தி உள்ளனர். தே.மு.தி.க.வை விட பா.ம.க.வை தங்கள் அணியில் வைத்திருக்க வேண்டும் என்பதில்தான் அ.தி.மு.க. தீவிரமாக உள்ளது. ஏனெனில் வட மாவட்டங்களில் கணிசமான அளவுக்கு செல்வாக்கு வைத்திருக்கும் பாட்டாளி மக்கள் கட்சி தங்களுடன் இருந்தால் பல எம்.பி. தொகுதிகளில் வெற்றி பெற முடியும் என்று அ.தி.மு.க. தலைவர்கள் கணக்கு போடுகிறார்கள்.
இதை கருத்தில் கொண்டு பாட்டாளி மக்கள் கட்சி கேட்கும் இடங்களை ஒதுக்கி கொடுக்க அ.தி.மு.க. தலைவர்கள் சம்மதித்து உள்ளனர். குறிப்பாக பா.ம.க. கேட்கும் 8 தொகுதிகளை ஒதுக்கி கொடுக்க அ.தி.மு.க. முன் வந்துள்ளது. பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் தர்மபுரி, கடலூர், சிதம்பரம், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திண்டுக்கல், விருதுநகர் உள்பட 8 தொகுதிகளை கேட்கிறார்கள். இதில் தர்மபுரி தொகுதியில் டாக்டர் அன்புமணி ராமதாசை களம் இறக்க முடிவு செய்தி ருப்பதாக கூறப்படுகிறது.
தென் மாவட்டங்களில் விருதுநகர், திண்டுக்கல்லில் தங்கள் கட்சியில் உள்ள தென்மாவட்ட தலைவர்களுக்கு பிரதிநிதித்துவம் கொடுக்க பா.ம.க. தலைவர்கள் விரும்புகிறார்கள். இதை அ.தி.மு.க. தலைமை ஏற்றுக்கொண்டிருப்பதாக கூறப்படுகிறது. நேற்று முன்தினம் எடப்பாடி பழனிசாமியுடன் 3 பா.ம.க. எம்.எல்.ஏ.க்கள் சந்தித்து பேசினார்கள். அப்போது டாக்டர் ராமதாஸ் விடுத்துள்ள கோரிக்கைகள் அனைத்தையும் ஏற்று நிறைவேற்றுவதாக எடப்பாடி பழனிசாமி தரப்பில் வாக்குறுதி அளிக்கப்பட்டதாக தெரியவந்துள்ளது.
இந்த நிலையில் பாட்டாளி மக்கள் கட்சியை அ.தி.மு.க.விடம் இருந்து தட்டி பறிக்க தமிழக பாரதிய ஜனதா அதிரடி திட்டம் ஒன்றுடன் களத்தில் இறங்கி உள்ளது. அதன்படி பா.ம.க. வுக்கு அ.தி.மு.க. தருவதை விட கூடுதல் தொகுதிகள் தருவதாக பாரதிய ஜனதா தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது 12 எம்.பி. தொகுதிகள், 2 மேல்சபை எம்.பி. இடங்கள், ஒரு மத்திய மந்திரி பதவி ஆகியவற்றை ஒதுக்கி தருவதாக பாட்டாளி மக்கள் கட்சி தலைவரிடம் பாரதிய ஜனதா மேலிடம் கூறியிருப்பதாக நம்பத்தகுந்த வட்டாரங்களில் இருந்து தகவல் கிடைத்துள்ளது. பா.ம.க.விடம் ஆசை காட்டும் வகையில் இந்த தொகுதி ஒதுக்கீட்டை பா.ஜ.க. தலைவர்கள் கையில் எடுத்து இருப்பதாக கூறப்படுகிறது.
இந்த விஷயத்தில் டாக்டர் ராமதாஸ் மற்றும் டாக்டர் அன்புமணி ராமதாஸ் இன்னும் உறுதியான முடிவு எடுக்கவில்லை என்று தெரிகிறது. அ.தி.மு.க.வுடன் மீண்டும் பேசி விட்டு இறுதி முடிவு எடுக்க திட்டமிட்டு இருப்பதாக தெரிகிறது. இதன் காரணமாக அ.தி.மு.க. அணியில் பா.ம.க. சேருமா? அல்லது பாரதிய ஜனதா பக்கம் செல்வார்களா? என்பதில் மிகுந்த எதிர்பார்ப்பு நிலவுகிறது.