உத்தரபிரதேச மாநிலத்தில் பா.ஜனதா சார்பில் ராம்சங்கர் கதேரியா கடந்த முறை ஆக்ரா பாராளுமன்ற தொகுதியில் போட்டியிட்டு எம்.பி. ஆனார். வரும் தேர்தலில் அவர் இட்டாவா தொகுதியில் போட்டியிடுகிறார். இவர் தாழ்த்தப்பட்டோர் தேசிய கமிஷன் தலைவராகவும் உள்ளார்.
இந்நிலையில் அவருடைய மனைவி மிருதுளா கட்டாரியா சுயேச்சையாக கணவரை எதிர்த்து அதே தொகுதியில் போட்டியிடுகிறார். இது குறித்து அவர் கூறுகையில், கடந்த பல ஆண்டுகளாக இட்டாவா தொகுதியில் பா.ஜனதா சார்பில் போட்டியிட வாய்ப்பு கிடைக்கும் என எதிர்பார்த்தேன். ஆனால் இந்த முறையும் எனக்கு ‘சீட்’ வழங்கப்படவில்லை. என் கணவர் மீது எனக்கு எந்த கோபமும் இல்லை. பா.ஜனதா கட்சிக்கு பாடம் புகட்ட சுயேச்சையாக களம் இறங்கி உள்ளேன் என்றார்.
இட்டாவா தொகுதியின் தற்போதைய எம்.பி. அசோக் டேக்ரே, தனக்கு மீண்டும் அதே தொகுதியில் பா.ஜனதா சார்பில் போட்டியிட வாய்ப்பு கிடைக்காததால் காங்கிரஸ் கட்சிக்கு தாவினார் என்பது குறிப்பிடத்தக்கது.