Tamilசெய்திகள்

பா.ஜ.க வெறுப்பு விதைகளை விதைத்து, பிரிவினையின் பலனை அறுவடை செய்கிறது – மல்லிகார்ஜ்ன் கார்கே பேச்சு

கடந்த அக்டோபர் மாதம் காங்கிரஸ் தலைவராக மல்லிகார்ஜுன் கார்கே பொறுப்பேற்ற பிறகு, கட்சியின் மிக உயர்ந்த முடிவெடுக்கும் அமைப்பான காங்கிரஸ் காரியக் கமிட்டிக்கு பதிலாக வழி நடத்தல் குழு உருவாக்கப்பட்டது. இந்த குழுவின் முதல் கூட்டம் கார்கே தலைமையில டெல்லியில் இன்று நடைபெற்றது.

முன்னாள் தலைவர் சோனியா காந்தி, ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட், சத்தீஸ்கர் முதல்வர் பூபேஷ் பாகேல், மூத்த தலைவர்கள் ப சிதம்பரம், ஆனந்த் சர்மா, மீரா குமார், அம்பிகா சோனி மற்றும் மாநிலங்களுக்கான கட்சியின் மேலிட பொறுப்பாளர்கள் உள்ளிட்டோர் கூட்டத்தில் பங்கேற்றனர். பாத யாத்திரையில் பங்கேற்றுள்ளதால் ராகுல் காந்தி கூட்டத்தில் கலந்து கொள்ளவில்லை.

இதில் பேசிய மல்லிகார்ஜுன் கார்கே கூறியுள்ளதாவது:

வெறுப்பு விதைகளை விதைத்து, பிரிவினையின் பலனை அறுவடை செய்யும் ஆளும் கட்சிக்கு எதிராகப் போராடுவது நமது கடமை. ராகுல் காந்தியின் தலைமையில் நடைபெறும் இந்திய ஒற்றுமை பாத யாத்திரை, புதிய வரலாற்றை எழுதி, தேசிய இயக்கமாக உருவெடுத்துள்ளது. அடுத்த 30 முதல் 90 நாட்களுக்குள் மக்கள் பிரச்னைகளில் கட்சியின் நடவடிக்கை குறித்து மாநில பொறுப்பாளர்கள் அறிக்கை அளிக்க வேண்டும்.

உயர்மட்டத்தில் இருந்து அடிமட்டம் வரை கட்சியின் பொறுப்பில் உள்ளவர்கள் தங்கள் கடமையை உணர்ந்து செயல்பட வேண்டும். கடமையை நிறைவேற்ற முடியாதவர்கள், அடுத்தவருக்கு வழிவிட வேண்டும். காங்கிரஸ் வலுவாகவும், பொறுப்பாகவும், மக்களின் எதிர்பார்ப்புகளுக்கு ஏற்ப செயல்பட்டால் மட்டுமே தேர்தலில் வெற்றி பெற்று நாட்டு மக்களுக்கு சேவை செய்ய முடியும்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.