சென்னையில் மீன்வளத்துறை அமைச்சர் டி.ஜெயகுமார் நிருபர்களிடம் கூறியதாவது:
தி.மு.க. தலைவர் ஸ்டாலினுக்கு இப்போது என்ன அவசரம், அவருக்கு குறுக்கு வழியில் ஆட்சியை பிடிக்க வேண்டும், இல்லையென்றால் இந்த ஆட்சியே இல்லாமல் தேர்தலை நடத்த வேண்டும் என்ற நிறைவேறாத ஆசை உள்ளது.
ஸ்டாலின் தேர்தலை விரும்பினாலும் அவருடைய கட்சி எம்.எல்.ஏ.க்கள் தேர்தலை விரும்பவில்லை.
பா.ஜ.க. அ.தி.மு.க.வுடன் கூட்டணி வைக்க வேண்டும் என்று குருமூர்த்தி ஒரு பத்திரிக்கையாளராக இருந்து அவருடைய ஆசையை கூறி உள்ளார். பா.ஜ.க. கூட்டணி வைக்க விரும்பினாலும், நாங்கள் கூட்டணி வைக்க விரும்ப வேண்டும். செயற்குழு, பொதுக்குழு கூடி உரிய நேரத்தில் முடிவு அறிவிக்கப்படும்.
கோடநாடு விவகாரத்தில் அரசுக்கு எந்த பின்னடைவும் இல்லை. இறந்தவர்களை வைத்து அரசியல் செய்வது தற்போது நாகரிகமாக மாறிவிட்டது. புழுதி வாரி தூற்றிப் பார்த்தார்கள் முடியவில்லை என்பதால் இப்போது கோடநாடு விவகாரத்தை உருவாக்கி கிளப்பிவிட்டுள்ளனர். தேர்தல் நெருங்கும் சமயத்தில் இன்னும் பல்வேறு திகில் காட்சிகளை வைத்து எதிர்கட்சிகள் அரசியல் செய்வார்கள். தி.மு.க. மற்றும் தினகரனிடம் இருந்து இன்னும் அதிகம் வரும்.
பாராளுமன்ற தேர்தல் தேதி இன்னும் அறிவிக்கவில்லை. எனவே அ.தி.மு.க. பொதுக்குழுவை கூட்ட கால அவகாசம் உள்ளது. தேர்தல் தேதி அறிவித்த பின் சூடான காட்சிகள் வரும். கோடநாடு விவகாரத்தில் நீதிமன்றத்தில் வழக்கு உள்ளது.
முதல்-அமைச்சருக்கு, ஆட்சிக்கு கெட்ட பெயர் உருவாக்க வேண்டும் என்று சதி நடைப்பெற்று வருகிறது. அது அவர்களின் நிராசையாக தான் முடியும்.
இவ்வாறு அவர் கூறினார்.