Tamilசெய்திகள்

பா.ஜ.க-வுடன் ஒருபோதும் கூட்டணி அமைக்க மாட்டோம்! – மு.க.ஸ்டாலின்

ஒருபோதும் பா.ஜ.க-வுடன் கூட்டணி அமைக்கப் போவதில்லை, என்று தெரிவித்திருக்கும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இது குறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

“வாஜ்பாய் கலாச்சாரத்தைப் பின்பற்றி நம்முடைய பழைய நண்பர்களை வரவேற்க நாம் எப்போதுமே தயாராக இருக்கிறோம். கூட்டணிக்கான கதவுகள் திறந்தே இருக்கின்றன” என்று பிரதமர் மோடி, தமிழகத்தில் உள்ள தனது கட்சி நிர்வாகிகளுடன் காணொலிக்காட்சியில் பேசும் போது குறிப்பிட்டுள்ளது வியப்பாகவும் விசித்திரமாகவும் இருக்கிறது.

இந்த நான்கரை ஆண்டு காலத்தில் இந்திய ஒருமைப்பாட்டினை பலப்படுத்தவோ, வலுப்படுத்தவோ எந்த வகையிலும் உதவாத வெறுப்புப் பேச்சுக்களை விதைத்து, பிற்படுத்தப்பட்டோர் மற்றும் தாழ்த்தப்பட்ட மலைவாழ் மக்களின் நண்பன் என்று கூறிக்கொண்டே சமூக நீதியை குழி தோண்டிப் புதைக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டு, தமிழகத்தின் நலன்களை அடியோடு புறக்கணித்தது.

கூட்டாட்சித் தத்துவத்திற்கு உலை வைத்து அரசியல் சட்டத்தின் கீழ் இயங்கும் அமைப்புகள் அனைத்தையும் தலைசாய வைத்துள்ள பிரதமர் மோடி, தன்னை “சரியான மனிதர் தவறான கட்சியில் இருக்கிறார்” என்று தலைவர் கலைஞரால் வர்ணிக்கப்பட்ட முன்னாள் பிரதமர் வாஜ்பாயுடன் ஒப்பிட்டுக் கொள்வது வேடிக்கையாகவும், வினோதமாகவும் மட்டுமல்ல வழக்கம் போல அவரது “பிரச்சார யுக்தியாகவே” இருக்கிறது.

“நாட்டின் வளர்ச்சிக்கு ஒரு நிலையான ஆட்சி தேவை” என்ற ஒரே உன்னத நோக்கத்திற்காக பா.ஜ.க.வும் இடம்பெற்ற தேசிய ஜனநாயகக் கூட்டணியில் “குறைந்தபட்ச செயல் திட்டம்” உருவாக்கிய பிரதமர் வாஜ்பாயுடன் தி.மு.க. கூட்டணி வைத்தது.

நாட்டை பிளவுபடுத்தும் எந்த வேலைத்திட்டத்தையும் முன் வைக்காமல் ஒரு அஜெண்டாவை உருவாக்கி தேசிய ஜனநாயக கூட்டணியை பிரதமராக இருந்த வாஜ்பாய் ஏற்படுத்தியதையும், தி.மு.க.வின் நிலையான ஆதரவுடன் அவர் ஆட்சி செய்ததையும் நாடறியும். பிறகு மதவாதக்குரல்கள் எழுந்தவுடன் அக்கூட்டணியில் இருந்து துணிச்சலுடன் வெளியேறியதும் தி.மு.க.தான் என்பதையும் நாடறியும்.

ஆனால் தற்போது பிரதமர் மோடி வாஜ்பாயும் அல்ல அவர் தலைமையில் உள்ள தேசிய ஜனநாயக கூட்டணி வாஜ்பாய் உருவாக்கியது போன்றதொரு ஆரோக்கியமான கூட்டணியும் அல்ல! பன்முகத்தன்மை கொண்ட இந்தியாவைப் போற்றிப் பாதுகாப்பதற்காக பிரதமர் மோடி ஆட்சிப் பொறுப்பில் இருப்பவரும் அல்ல!

முன்பு எந்தப் பிரதமரும் ஆட்சி செய்தபோது இல்லாத அளவிற்கு தமிழக உரிமைகள் பறிக்கப்பட்டது பிரதமர் நரேந்திர மோடி ஆட்சியில்தான் என்பதை தமிழக மக்கள் என்றைக்கும் மறக்கமாட்டார்கள்.

“மதசார்பின்மை”, “சமூக நீதி”, “சமத்துவம்” “கூட்டாட்சித் தத்துவம்”, “மாநில உரிமைகள்” எல்லாம் தனக்கு “வேண்டாத வார்த்தைகள்” என்ற விபரீத மனப்பான்மையில் கடந்த நான்கரை ஆண்டுகாலமாக பிரதமராகப் பொறுப்பேற்றிருக்கும் மோடி தலைமையிலான பா.ஜ.க.வுடன் தி.மு.க. ஒருபோதும் கூட்டணி வைக்காது என்பதை மீண்டும் ஆணித்தரமாக விளக்கிட விரும்புகிறேன்.

இவ்வாறு மு.க.ஸ்டாலின் கூறி உள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *