பாராளுமன்ற தேர்தல் தோல்விக்கு பொறுப்பேற்று காங்கிரஸ் தலைவர் பதவியை துறந்துள்ள ராகுல் காந்தி, நாள்தோறும் கோர்ட்டுகளில் வழக்கு விசாரணைகளை எதிர்கொண்டு வருகிறார்.
அந்த வகையில், அவர் நேற்று பிரதமர் மோடியின் சொந்த மாநிலமான குஜராத்தில் உள்ள ஆமதாபாத் நகருக்கு வந்தார்.
2016-ம் ஆண்டு நவம்பர் 8-ந் தேதி பிரதமர் மோடி ரூபாய் நோட்டு மதிப்பிழப்பு நடவடிக்கை எடுத்தபோது, அதன் முதல் 5 நாளில் ஆமதாபாத் மாவட்ட கூட்டுறவு வங்கியில், செல்லாது என அறிவிக்கப்பட்ட உயர் மதிப்பு கொண்ட ரூ.750 கோடி மதிப்பிலான நோட்டுகளை மாற்றி, ஊழல் நடந்துள்ளது என ராகுல் காந்தி உள்ளிட்ட காங்கிரஸ் தலைவர்கள் தவறாக கூறியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இதையொட்டி ஆமதாபாத் பெருநகர குற்றவியல் கோர்ட்டில் ராகுல் காந்தி உள்ளிட்டவர்கள் மீது அவதூறு வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இந்த வழக்கு விசாரணைக்காக கோர்ட்டில் ஆஜர் ஆவதற்கு ராகுல்காந்தி நேற்று ஆமதாபாத் வந்தபோது டுவிட்டரில் பதிவுகள் வெளியிட்டார். அந்தப் பதிவுகளில் அவர் கூறி இருப்பதாவது:-
ஆர்.எஸ்.எஸ். மற்றும் பாரதீய ஜனதா கட்சியில் உள்ள எனது அரசியல் எதிரிகள் தொடர்ந்து உள்ள மற்றொரு வழக்கில் ஆஜர் ஆவதற்காக நான் ஆமதாபாத்தில் இருக்கிறேன்.
பொதுமக்களிடம் அவர் களுக்கு (ஆர்.எஸ்.எஸ். மற்றும் பாரதீய ஜனதா கட்சியினர்) எதிரான கொள்கை ரீதியிலான போரை எடுத்துச் செல்வதற்கு இந்த களங்களையும், வாய்ப்புகளையும் வழங்கியுள்ளதற்காக அவர்களுக்கு நான் நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். வாய்மையே வெல்லும்.
இவ்வாறு அந்தப் பதிவுகளில் ராகுல் காந்தி கூறி உள்ளார்.