பா.ஜ.க-வுக்கு ஜனவரி மாதம் புதிய தலைவர் நியமனம்!

பாரதிய ஜனதா கட்சிக்கு தலைவராக இருந்த அமித்ஷா மத்திய மந்திரி சபையில் கடந்த மே மாதம் சேர்ந்ததை தொடர்ந்து செயல் தலைவராக ஜே.பி.நட்டா அறிவிக்கப்பட்டார்.

பாரதிய ஜனதா கட்சியில் ஒருவர், ஒரு பதவியில்தான் இருக்க வேண்டும் என்று விதி உள்ளது. மேலும் கட்சி அமைப்பு நிர்வாகிகள் தேர்தல் மூலம் தேர்வு செய்யப்பட வேண்டும் என்று விதி உள்ளது.

இதையடுத்து பாரதிய ஜனதா கட்சிக்கு அடுத்த ஆண்டு தொடக்கத்தில் உள்கட்சி தேர்தலை நடத்தி முடிக்க மூத்த தலைவர்கள் முடிவு செய்துள்ளனர். தற்போது சில மாநிலங்களுக்கு பா.ஜ.க. தலைவர்கள் நியமனம் செய்யப்பட வேண்டி உள்ளது.

இந்த ஆண்டு இறுதிக்குள் சில மாநில பா.ஜ.க. தலைவர்கள் நியமனம் செய்யப்பட உள்ளனர். அதில் தாமதம் ஏற்பட்டால் ஜனவரி மாதம் 15-ந்தேதிக்கு பிறகு புதிய தலைவர்கள் நியமனம் நடைபெறும்.

மார்கழி மாதம் புதிய முடிவுகளை எடுக்க உகந்த மாதம் இல்லை என்பதால் பாரதிய ஜனதா ஜனவரி 15-ந்தேதிக்கு பிறகு புதிய நிர்வாகிகளை அறிவிக்க ஏற்பாடு செய்துள்ளது. மாநில தலைவர்கள் மற்றும் புதிய நிர்வாகிகள் ஒருங்கிணைந்து பாரதிய ஜனதாவின் புதிய தேசிய தலைவரை தேர்வு செய்வார்கள்.

அனேகமாக புதிய தலைவர் தேர்தல் பிப்ரவரி மாதம் நடைபெறும் என்று தெரிகிறது. அதில் புதிய தலைவர் ஏகமனதாக தேர்வு செய்யப்படுவார். அப்போது தற்போதைய செயல் தலைவர் ஜே.பி.நட்டா அதிகாரப்பூர்வமாக பாரதிய ஜனதாவின் தலைவராக தேர்வு செய்யப்படுவாரா? என்பது தெரியவரும்.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools
Tags: south news