Tamilசெய்திகள்

பா.ஜ.க-வுக்கு ஆதரவாக சக்தி வாய்ந்த பேரலை வீசுகிறது – காஷ்மீர் பிரசாரத்தில் பிரதமர் மோடி பேச்சு

காஷ்மீர் மாநிலத்தின் கத்துவா மாவட்டத்தில் இன்று நடைபெற்ற பாஜக பிரசார பொதுக்கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்று உரையாற்றினார்.

60 ஆண்டுகால ஆட்சியில் காங்கிரஸ் இழைத்த அநீதிகளுக்கு யார் பரிகாரம் செய்வார்கள்? என்று கேள்வி எழுப்பிய மோடி, 1984-ம் ஆண்டில் சீக்கியர்களுக்கு எதிரான கலவரத்துக்கும், காஷ்மீரில் பண்டிதர்களுக்கு எதிராக கட்டவிழ்த்து விடப்பட்ட வன்முறை சம்பவங்களுக்கு நீதி வழங்க காங்கிரஸ் தயாரா? என்று கேட்க விரும்புவதாக தெரிவித்தார்.

‘காங்கிரஸ் அரசின் கொள்கைகளால்தான் காஷ்மீர் பண்டிதர்கள் நம் நாட்டை விட்டு வெளியேற வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டது. ஓட்டு வங்கிக்காக காஷ்மீர் பண்டிதர்களுக்கு இழைக்கப்பட்ட கொடுமைகளை காங்கிரஸ் கட்சியினர் பெரிதுப்படுத்தவில்லை.

காஷ்மீர் பண்டிதர்கள் தங்களது வீடுகளை இழந்து, இங்கிருந்து வெளியேறி பாகிஸ்தானுக்கு செல்ல காங்கிரசின் கொள்கைகளே காரணமாக இருந்தது.

ஆனால், எங்கள் ஆட்சியில் காஷ்மீர் பண்டிதர்கள் மீண்டும் இங்கே வந்து தங்களது சொந்த மண்ணில் வாழ்வதற்கான நடைமுறைகள் தொடங்கி விட்டன. பாகிஸ்தானில் இருந்து அவதிப்பட்டு பாரத அன்னையை நம்பி இங்கு வந்திருப்பவர்களுக்கு இந்திய குடியுரிமை அளிப்பதற்கு சட்டம் இயற்ற தேவையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம்.

காஷ்மீர் மாநிலத்தை ஆட்சி செய்த அப்துல்லா குடும்பமும் முப்தி குடும்பமும் 3 தலைமுறை மக்களின் வாழ்க்கையை சீரழித்து விட்டன. இந்த குடும்பங்களுக்கு விடை கொடுக்கும்போது தான் காஷ்மீரின் ஒளிமயமான எதிர்காலம் உருவாகும். இவர்கள் மோடியை ஒழிப்பதற்காக எதை வேண்டுமானாலும் செய்வார்கள். ஆனால், இந்த நாட்டை ஒருபோதும் இவர்களால் பிளவுப்படுத்த முடியாது.

சமீபத்தில் இங்கு நடைபெற்ற முதல்கட்ட பாராளுமன்ற தேர்தலில் பாரமுல்லா, ஜம்மு மாவட்டங்களில் பெருவாரியான அளவில் வாக்களித்ததன் மூலம் நமது நாட்டின் ஜனநாயக வலிமையை நீங்கள் நிலைநாட்டி இருக்கிறீர்கள். பயங்கரவாதிகளுக்கும் பிரிவினைவாதிகளுக்கும் சந்தர்ப்பவாதிகளுக்கும் சரியான பதிலடியை தந்து விட்டீர்கள்.

இந்த தேர்தலில் பாஜகவுக்கு ஆதரவாக சக்திவாய்ந்த பேரலை வீசுகிறது. கருத்துக் கணிப்புகளின்படி காங்கிரஸ் கட்சியை விட மூன்று மடங்கு அதிகமான இடங்களில் பாஜக வெற்றி பெறும் என்பதை உங்களுக்கு நான் தெரிவித்துக் கொள்கிறேன்’ எனவும் மோடி கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *