பா.ஜ.க- வில் இணையும் கங்குலி?
மத்திய உள்துறை மந்திரி அமித்ஷாவை பிரபல முன்னாள் கிரிக்கெட் வீரர் சவுரவ் கங்குலி கடந்த சனிக்கிழமை சந்தித்துப் பேசினார்.
அவர்கள் இருவரும் சுமார் 1 மணி நேரம் பேசிக் கொண்டிருந்தனர். இந்த சந்திப்புக்கு பிறகுதான் இந்திய கிரிக்கெட் சங்கத் தலைவராக கங்குலி தேர்வாக இருக்கும் தகவல் வெளியானது.
பாரதிய ஜனதா கட்சி தலைவர்கள் தலையிட்டதால்தான் கிரிக்கெட் சங்கத் தலைவராக கங்குலி தேர்வானார் என்று பரபரப்பாக பேசப்படுகிறது. இந்த நிலையில் கங்குலி விரைவில் பாரதிய ஜனதா கட்சியில் சேர்ந்து விடுவார் என்று சமூக வலைத்தளங்களில் வைரலாக தகவல் பரவியது.
இதுபற்றி கங்குலியிடம் தொடர்பு கொண்டு கேட்ட போது அவர் எதையும் தெரிவிக்க மறுத்து விட்டார். அதே சமயத்தில் மத்திய மந்திரி அமித்ஷா இது தொடர்பாக விளக்கம் அளித்துள்ளார். அவர் கூறியதாவது:-
கிரிக்கெட் சங்கத் தலைவராக கங்குலி தேர்வு செய்யப்பட்டதற்கும், எனக்கும் எந்த தொடர்பும் இல்லை. கிரிக்கெட் சங்க தலைவராக யார் வர வேண்டும் என்று நான் முடிவு செய்ய முடியாது. கிரிக்கெகட் சங்க தேர்தல் விதிகளின் அடிப்படையில் கங்குலி அந்த பதவிக்கு வந்துள்ளார்.
நான் கிரிக்கெட் விளையாட்டுடன் கடந்த பல ஆண்டுகளாக தொடர்பு வைத்துள்ளேன். எனவே கங்குலி என்னை சந்தித்துப் பேசியதில் எந்த தவறும் இல்லை. நாங்கள் அரசியல் பேசவில்லை.
மேற்கு வங்க சட்டசபை தேர்தலை முன்னிட்டு கங்குலியிடம் நான் பேரம் பேசியதாக தகவலை பரப்புகிறார்கள். நான் அத்தகைய பேரம் எதையும் பேசவில்லை. அதே சமயத்தில் கங்குலி விரும்பி வந்தால் அவரை வரவேற்று சேர்த்துக்கொள்ள பா.ஜ.க. தயாராக உள்ளது.
அவருக்கு மட்டுமல்ல…. இந்திய குடிமக்கள் ஒவ்வொருவருக்கும் நான் சொல்வது என்னவென்றால், பாரதிய ஜனதா கட்சிதான் தாங்கள் சேருவதற்கு சிறந்த கட்சியாகும். இதை செய்ய நான் தயங்க மாட்டேன். இதுதான் என் வேலை.
மேற்கு வங்க தேர்தலுக்காகவே கங்குலியை நாங்கள் தேடுவதாக சொல்வது தவறு. எந்த பிரபலமும் இல்லாமலேயே அங்கு 18 இடங்களில் பா.ஜ.க. வெற்றி பெற்றது. வரும் தேர்தலில் அமோக வெற்ற பெறுவோம்.
இவ்வாறு அமித்ஷா கூறினார்.
கடந்த 2016-ம் ஆண்டு சட்டசபை தேர்தலின்போதும் கங்குலியை சேர்க்க பா.ஜனதா முயற்சி செய்தது.