பிரதமர் மோடியின் பாதுகாப்பு விஷயத்தில் குளறுபடி செய்த பஞ்சாப் மாநில அரசை கண்டித்து சென்னையில் பா.ஜனதா கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
பிரதமர் நரேந்திர மோடி பஞ்சாப் சென்ற போது அவரது பாதுகாப்பு விஷயத்தில் அவரது உயிருக்கு தீங்கு விளைவிக்க முயன்ற பஞ்சாப் மாநில அரசை கண்டித்து பட்டினப்பாக்கம் சீனிவாசபுரத்தில் பா.ஜனதா சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் இன்று நடந்தது.
இந்த போராட்டத்திற்கு போலீஸ் அனுமதி வழங்கவில்லை. ஆனால் அதை மீறி பா.ஜனதாவினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆர்ப்பாட்டத்துக்கு முன்னாள் மத்திய மந்திரி பொன். ராதாகிருஷ்ணன் தலைமை வகித்தார். மாநில துணைத்தலைவர் வி.பி.துரைசாமி, பொதுச் செயலாளர் கரு.நாகராஜன், சுதாகர்ரெட்டி, தேசிய செயற்குழு உறுப்பினர் குஷ்பு சுந்தர், எம்.என் ராஜா, சென்னை மாநகராட்சி தேர்தல் பொறுப்பாளர் கராத்தே தியாகராஜன், மாநிலச் செயலாளர்கள் சுமதி வெங்கடேசன், டால்பின் ஸ்ரீதர்,திருப்பதி நாராயணன், மாநில மீனவர் அணித் தலைவர் சதீஷ்குமார், மாவட்டத் தலைவர்கள் காளிதாஸ், சென்னை சிவா, விஜய் ஆனந்த், தனசேகர், தட்சிணாமூர்த்தி, கிருஷ்ணகுமார் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
அவர்களை கைது செய்ய போலீசார் முயன்றனர். அப்போது அதை கண்டித்து சாலை மறியலில் 300 பேர் ஈடுபட்டனர். பின்னர் அனைவரும் கைது செய்யப்பட்டனர்.
பஞ்சாப் மாநிலத்திற்கு பிரதமர் மோடி சென்றபோது அவரது பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ள நிகழ்ச்சி மிகவும் கண்டனத்துக்கு உரியதாகும். பிரதமர் மோடி கட்சிக்கு அப்பாற்பட்டவர். உலகத்தில் எங்கும் இதுபோன்ற சம்பவங்கள் நடந்ததில்லை. ஒரு நாட்டின் பிரதமருக்கு உரிய பாதுகாப்பு அளிக்க பஞ்சாப் அரசு தவறிவிட்டது .இந்த சம்பவம் நிச்சயமாக குறி வைத்து, திட்டமிட்டு செய்யப்பட்டதாகும். பஞ்சாப் மாநிலத்தை ஆளும் காங்கிரஸ் ஆட்சி மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
காங்கிரஸ் தலைவி சோனியா காந்தி இந்த சம்பவம் குறித்து ஆராயப்பட வேண்டும் என்று கூறியுள்ளார். அவர் அப்படி சொன்னால் மட்டும் போதாது. இதுகுறித்து விசாரணை நடத்த வேண்டும்.அந்த விசாரணை மூலம் இதற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்.
இவர் அவர் கூறினார்.